கனடியப் பிரதமரைச் சந்தித்தார் இந்தியப் பிரதமர் மோடி

கனடியப் பிரதமரைச் சந்தித்தார் இந்தியப் பிரதமர் மோடி

2 mins read
e1f41898-6150-45a7-bb24-0cd38e418da0
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் கனடியப் பிரதமர் மார்க் கார்னியும் புதுடெல்லியில் சந்தித்துக்கொண்டனர். - படம்: புளூம்பர்க்
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் கனடியப் பிரதமர் மார்க் கார்னியும் இருநாட்டு ஒத்துழைப்பையும் பங்காளித்துவத்தையும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

திரு மோடியின் அழைப்பை ஏற்று திரு கார்னி பிப்ரவரி 27ஆம் தேதி இந்தியாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டார். அவர் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் திரு மோடியைச் சந்தித்தார்.

இந்திய- கனடா உத்திபூர்வப் பங்காளித்துவத்தின்கீழ் உள்ள பல்வேறு துறைகளில் கண்டுள்ள முன்னேற்றம் பற்றி திரு மோடியும் திரு கார்னியும் பேசினர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கனானாஸ்கிஸில் நடைபெற்ற ஜி7 உச்சநிலை மாநாட்டிலும் நவம்பர் மாதம் ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெற்ற ஜி20 உச்சநிலை மாநாட்டிலும் இருநாட்டுத் தலைவர்களும் சந்தித்துக்கொண்டனர்.

அதையடுத்து இந்தியாவில் சந்தித்துக்கொள்ளும் அவர்கள், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, முக்கிய தாதுப் பொருள்கள், வேளாண்மை, கல்வி, ஆராய்ச்சி, புத்தாக்கம், மக்கள் தொடர்பு போன்ற முக்கிய அம்சங்களில் தொடரும் ஒத்துழைப்புகள் பற்றி பேசினர்.

திரு மோடியும் திரு கார்னியும் வட்டார ரீதியிலும் அனைத்துலக ரீதியிலும் உள்ள விவகாரங்கள் பற்றியும் கலந்துரையாடியதாக இந்திய வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது.

அதைத் தவிர்த்து திரு மோடியும் திரு கார்னியும் இந்திய- கனடா தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கான மாநாட்டிலும் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

இந்தியாவுக்குத் திரு கார்னி அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறை. மும்பையில் சென்றிறங்கிய அவர், டெல்லியிலிருந்து கனடாவுக்குப் புறப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் 2ஆம் தேதி காலை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், கனடியப் பிரதமர் கார்னியைச் சந்தித்துப் பேசினார். இருநாட்டு உறவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்ல திரு கார்னி கொண்டிருக்கும் உறுதியைத் திரு ஜெய்சங்கர் பாராட்டினார்.

மும்பைக்கு உற்பத்தித் துறை தொடர்பான சந்திப்புகளுக்குச் சென்றிருந்த திரு கார்னி, ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) காலை டெல்லியைச் சென்றடைந்தார். வர்த்தக, தொழில் அமைச்சரும் மின்னிலக்கப் பொருள்கள், தகவல் தொழில்நுட்ப அமைச்சருமான திரு ஜித்தின் பிரசாதா திரு கார்னியை வரவேற்றார்.

குறிப்புச் சொற்கள்
நரேந்திர மோடிஇந்தியாகனடாபிரதமர்சந்திப்பு