மத்திய கிழக்கு நெருக்கடிக்கு இடையே ஐந்து நாடுகளுக்கு மோடி பயணம்

மத்திய கிழக்கு நெருக்கடிக்கு இடையே ஐந்து நாடுகளுக்கு மோடி பயணம்

2 mins read
3ddedfee-11f4-4cb9-baa5-01399080a756
பிரதமர் நரேந்திர மோடி. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

புதுடெல்லி: மத்திய கிழக்கு நெருக்கடி உலகளாவிய எண்ணெய் விலையை உயர்த்தியுள்ள வேளையிலும், இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு குறைந்துவரும் நிலையிலும் பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்குப் பயணம் செய்ய உள்ளார்.

மே 15 முதல் 20 வரை அவர் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் அரசுமுறைப் பயணம் செய்ய இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

பயணத்தின் தொடக்கமாக, மே 15ஆம் தேதி ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்குச் சென்று சேரும் திரு மோடி, அந்நாட்டு அதிபர் ஷேக் முகம்மது சயீத் அல்னஸ்யானைச் சந்தித்துப் பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் நெதர்லாந்து, சுவீடன், நார்வே, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு அவர் செல்வார் என்று அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.

எரிசக்தி விலைகளின் திடீர் உயர்வு நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பைப் பாதித்துவரும் நிலையில், எரிபொருள் சேமிப்பு, இறக்குமதிகளைக் குறைப்பதுடன் தங்கம் வாங்குவதை ஓராண்டுக்குத் தள்ளிப்போடுவது, பயணங்களைக் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த கையோடு வெளிநாட்டுப் பயணங்களுக்குத் திரு மோடி தயாராகி வருகிறார்.

எரிசக்தி இறக்குமதியாளரான இந்தியாவிற்கு, அதிகரித்துள்ள எண்ணெய் விலைகள் பெரும் ஆபத்தாக இருக்கிறது.

அந்த ஆபத்து நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை அதிகரிக்கவும் வளர்ச்சியை மெதுவடையச் செய்யவும் பணவீக்கத்தைத் தூண்டவும் கூடிய ஓர் அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது.

திரு மோடியும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் அதிபரும் இருதரப்பு விவகாரங்கள், குறிப்பாக எரிசக்தி ஒத்துழைப்பு போன்ற நலன் சார்ந்த வட்டார, அனைத்துலக விவகாரங்கள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக்கொள்வர் என்று வெளியுறவு அமைச்சின் அறிக்கை தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்