வெளிநாட்டில் இந்தியர் சுட்டுக்கொலை

1 mins read
ff533b5c-d21a-4949-8d71-23b056b2b1bc
இந்த வளாகத்தினுள்தான் இந்தியரான உத்தம் பண்டாரி சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. படம்: இணையம் -

நிதி நிறுவனம் நடத்திவந்த இந்தியர் ஒருவரைக் காவல்துறை அதிகாரி ஒருவர் சுட்டுக்கொன்ற சம்பவம் ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் நிகழ்ந்துள்ளது.

உத்தம் பண்டாரி, 39, என்ற அந்த இந்தியர் உகாண்டா தலைநகர் கம்பாலாவில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார்.

உகாண்டாவைச் சேர்ந்த இவான் வேப்வயர் என்ற காவல்துறை அதிகாரி, பண்டாரியிடம் கடன் வாங்கியிருந்தார்.

இந்நிலையில், கடனைத் திருப்பிச் செலுத்துவது தொடர்பில் இம்மாதம் 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை அவர்களுக்குள் வாக்குவாதம் எழுந்தது. அதனைத் தொடர்ந்து, வேப்வயர் தன்னிடமிருந்த துப்பாக்கியால் பண்டாரியைச் சுட்டுக்கொன்றுவிட்டார்.

ஞாயிற்றுக்கிழமையன்று வேப்வயரைக் காவல்துறை கைதுசெய்தது. சம்பவத்தின்போது அவர் பணியில் இல்லை எனக் கூறப்பட்டது.

ஸ்டீவன் முலாம்போ என்ற சக காவல்துறை அதிகாரியின் துப்பாக்கியை அவர் திருடிச் சென்று, இக்கொடிய குற்றத்தைப் புரிந்ததாகச் சொல்லப்பட்டது. முலாம்போவும் இப்போது காவல்துறையின் பிடியில் இருக்கிறார்.

மனநலப் பிரச்சினை காரணமாக துப்பாக்கியை வைத்திருக்க வேப்வயருக்குக் கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து ஆறு ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பண்டாரியின் குடும்பத்தார்க்கு உகாண்டா அதிபர் யோவெரி முசவெனி இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார்.

சம்பவம் தொடர்பான காணொளி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.