முதல் மூன்று மாதங்களில் 7.8% வளர்ச்சி கண்ட இந்தியப் பொருளியல்

முதல் மூன்று மாதங்களில் 7.8% வளர்ச்சி கண்ட இந்தியப் பொருளியல்

2 mins read
936bb70b-4369-498f-84f8-71a692c4255f
ஈரான் போர் காரணமாக நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.6 விழுக்காட்டுக்கு சுருங்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியாவின் பொருளியல் இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் 7.8 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது ஆண்டு அடிப்படையிலான வளர்ச்சி.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய கருத்தாய்வில் பங்கேற்ற பொருளியல் நிபுணர்கள், பொருளியல் வளர்ச்சி 7.2 விழுக்காடு இருக்கும் என்று கணித்திருந்ததையும் மீறி பொருளியல் நல்ல வளர்ச்சி கண்டிருப்பதாக அரசாங்கத் தரவுகள் குறிப்பிட்டன.

மத்திய கிழக்கு மோதலால் ஏற்பட்ட பலவீனமான வெளிப்புறத் தேவைகளை ஈடுசெய்ய, சிறப்பான வேளாண் உற்பத்தியும் விறுவிறுப்பான கட்டுமானப் பணிகளும் உதவியதாக வெள்ளிக்கிழமை (ஜூன் 5) வெளியிடப்பட்ட அந்தத் தரவுகள் தெரிவித்தன.

ஆயினும், 2025 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்று மாதங்களோடு ஒப்பிடுகையில் இந்த வளர்ச்சி சற்று குறைவுதான்.

அந்த மூன்று மாதங்களில் இதற்கு முன்னர் 7.8 விழுக்காடு என்று முன்னுரைக்கப்பட்டிருந்த விகிதத்தை அரசாங்கம் 8 விழுக்காடு என்று திருத்தியது.

மார்ச் மாதத்துடன் முடிவடைந்த கடந்த நிதியாண்டிற்கான வளர்ச்சி 7.7 விழுக்காடாக இருந்தது. அந்த விகிதம் 7.6 விழுக்காடாக இருக்கும் என்று பிப்ரவரி மாதம் கணிக்கப்பட்டிருந்ததாக தேசிய புள்ளிவிவர அலுவலகம் கூறியது.

மத்திய கிழக்கு மோதல் தொடங்குவதற்கு முன்பு வெளியிடப்பட்ட ஒரு கணிப்பில், நாட்டின் தலைமைப் பொருளியல் ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன், நடப்பு நிதியாண்டின் வளர்ச்சி 7 விழுக்காடு முதல் 7.4 விழுக்காடு வரை இருக்கும் என்று கணித்திருந்தார்.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே உடனடி அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான எந்த வாய்ப்பும் இல்லாத நிலையில், நான்காவது மாதமாக நீடித்து வரும் ஈரான் போரால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பொருளியல்களில் இந்தியாவும் ஒன்று.

போர் காரணமாக நடப்பு நிதியாண்டில் பொருளியல் வளர்ச்சி 6.6 விழுக்காடாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்தியாவின் மத்திய வங்கி வெள்ளிக்கிழமை (ஜூன் 5) காலையில் தெரிவித்திருந்தது.

உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளராகவும் நுகர்வோராகவும் இந்தியா விளங்குகிறது. மேலும் மத்திய கிழக்கிலிருந்து வரும் விநியோகங்களையே இந்தியா பெருமளவில் சார்ந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
பொருளியல்முன்னுரைப்புவளர்ச்சி