மங்கிய அமெரிக்க-இந்திய உறவு மீண்டும் மிளிரும்: உலகப் பொருளியல் நிபுணர்

மங்கிய அமெரிக்க-இந்திய உறவு மீண்டும் மிளிரும்: உலகப் பொருளியல் நிபுணர்

2 mins read
924f129b-fd4c-41a2-a7dd-59279559eccf
உலகப் பொருளியல் கருத்துமன்றத் தலைவர் போர்ஜ் பிரெண்டெ. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்திய-அமெரிக்க அரசதந்திர உறவில் ஏற்பட்டுள்ள சறுக்கல் தற்காலிகமானதுதான் என்றும் விரைவிலேயே அது சரியாகிவிடும் என்றும் உலகப் பொருளியல் கருத்துமன்றத் தலைவர் போர்ஜ் பிரெண்டெ கூறியுள்ளார்.

இந்தியா டுடே’ ஊடகத்திடம் பேசிய அவர், “இரு நாடுகளுக்கு இடையிலான நீண்டகால ஒத்துழைப்பில் எந்த மாற்றமும் நிகழவில்லை. இரு நாடுகளின் பொதுவான நலன்கள் அந்த உறவைப் பிரிக்க இயலாத அளவுக்கு வலுவாக உள்ளன,” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “இந்தியர்கள் இல்லாமல் அமெரிக்காவில் உள்ள ஆகப்பெரிய நிறுவனங்களை இயக்க இயலாது. இந்தியாவிலிருந்து சென்றவர்கள் அமெரிக்கப் பொருளியலுக்குக் கணிசமாகப் பங்களிக்கின்றனர்.

“இந்தியாவின் நிலவரத்தை எடுத்துக்கொண்டால், இந்திய மக்களிடையே மிகவும் பிரபலமான மனிதராக திரு டிரம்ப் திகழ்கிறார். அமெரிக்கா உட்பட வேறு எந்த நாட்டிலும் இல்லாத செல்வாக்கு அவருக்கு இந்தியாவில் உள்ளது,” என்றார் திரு பிரெண்டே.

உலகின் ஆகப் பெரிய பொருளியல் நாடுகளில் இந்தியா விரைவான வளர்ச்சி கண்டு வருகிறது என்பதை அமெரிக்கர்கள் அறிவர் என்றும் அவர் தெரிவித்தார்.

“இந்தியாவும் அமெரிக்காவும் நீண்டகால நட்பு நாடுகள். சில வாரங்களுக்கு முன்னர் அந்த உறவில் ஏற்பட்ட சிறிய சறுக்கல் விரைவிலேயே சரியாகும் எனக் கருதுகிறேன்.

“திரு மோடியை அழைத்து திரு டிரம்ப் பிறந்த நாள் வாழ்த்துக் கூறியுள்ளார். இருவருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல் நிலைமையைச் சரிசெய்யக்கூடும். வரும் வாரங்களில் ஒரு திருப்புமுனை ஏற்படும் என்று நம்புகிறேன்,” என்றார் அவர்.

திரு டிரம்ப்பின் வரிவிதிப்பு குறித்துக் கருத்துத் தெரிவித்த திரு பிரெண்டெ, அது இந்தியாவில் சிறியதொரு தாக்கத்தையே ஏற்படுத்தும் என்றார்.

“அமெரிக்காவும் இந்தியாவும் ஒன்றை ஒன்று சார்ந்து வர்த்தகம் புரியவில்லை. அதனதன் உள்நாட்டுச் சந்தைகளையே அவை பெரிதும் சார்ந்துள்ளன.

“அமெரிக்க நிர்வாகம் விதித்துள்ள புதிய வரிகளால் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 2 விழுக்காடு மட்டுமே பாதிக்கப்படலாம் என்பது எனது கணிப்பு,” என்று அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
பொருளியல்அமெரிக்காஇந்தியா

தொடர்புடைய செய்திகள்