இந்தியா நம்பகமான பொருளியல் பங்காளி: நார்வேயில் மோடி

இந்தியா நம்பகமான பொருளியல் பங்காளி: நார்வேயில் மோடி

2 mins read
744e5d06-51e7-4700-84cf-93ee708bfda6
நார்வே பிரதமர் ஜோனாஸ் கார்ஸ்டோர் திரு மோடியை விமான நிலையத்தில் வரவேற்றார் என்று இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது. - படம்: ஏஎன்ஐ
Google News Preferred Icon

புதுடெல்லி: தனது ஐரோப்பிய பயணத்தின் அடுத்த கட்டமாக நார்வே சென்றடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் தலைநகர் ஓஸ்லோவில் இந்தியா, நார்வே வர்த்தக மற்றும் ஆராய்ச்சிக்கான உச்ச நிலை மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.

திங்கட்கிழமை (மே 18) காலை ஓஸ்லோவில் அவர் தரையிறங்கினார். கடந்த 43 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் நார்வேக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். நார்வே பிரதமர் ஜோனாஸ் கார்ஸ்டோர் திரு மோடியை விமான நிலையத்தில் வரவேற்றார் என்று இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

உச்ச நிலை மாநாட்டில் பேசிய திரு மோடி, நார்வேயின் உணவு, மீன்வளம், சுகாதார நிறுவனங்கள் இந்தியாவிற்கு வலுவான கூட்டாளிகளாக மாறமுடியும் என்றார்.

மேலும் தூய்மையான எரிசக்தித் துறையில், இந்தியா கொண்டுள்ள லட்சியங்களுக்கு உலகில் யாரும் ஈடுகொடுக்க முடியாது என்றும் 2030ஆம் ஆண்டுக்குள், 500 ஜிகாவாட் தூய்மையான எரிசக்தியையும் ஐந்து மில்லியன் டன் பசுமை ஹைட்ரஜனையும் உற்பத்தி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய அமீரக சிற்றரசுகளில் இருந்து தொடங்கிய தனது ஐந்து நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, சுவீடனில் மேற்கொண்ட இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு மோடி நார்வே சென்றடைந்தார்.

திங்களன்று ஓஸ்லோவில் பிரதமர் மோடி அந்நாட்டின் முன்னணி வணிக, ஆராய்ச்சித் தலைவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது இந்தியாவில் உள்ள பல்வேறு வாய்ப்புகளை அவர் எடுத்துரைத்தார்.

நம்பகமான பொருளியல் பங்காளியாகவும் புத்தாக்க மையமாகவும் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதை இந்தச் சந்திப்பு பிரதிபலித்ததாக இந்திய வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது.

நார்வேயை அடுத்து இத்தாலிக்குச் செல்லும் அவர், அங்கு தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து இந்தியா திரும்புவார்.

ஓஸ்லோவில் நடைபெற்ற மூன்றாவது இந்தியா, நார்வே உச்ச நிலை மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, நார்வே தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார் என்று பிடிஐ செய்தி முகமை தெரிவித்தது.

செவ்வாய்க்கிழமை (மே 19) நடைபெற்ற இம்மாநாட்டில் இந்தியா, நார்வே, டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்றனர்.

ராகுல் காந்தி விமர்சனம்

இதனிடையே, நார்வேயில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, ​​தம்மை நோக்கி எழுப்பப்பட்ட பல கேள்விகளுக்குப் பதிலளிப்பதை பிரதமர் மோடி தவிர்ப்பது போன்று விவரிக்கும் காணொளி வெளியானதையடுத்து, இந்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திங்கட்கிழமை பிரதமர் நரேந்திர மோடியைக் கடுமையாகச் சாடினார்.

“சமரசத்திற்கு உள்ளான ஒரு பிரதமர், சில கேள்விகளுக்குப் பதறி ஓடுவதை உலகம் காணும்போது, ​​இந்தியாவின் பிம்பம் என்னவாகும்? என எக்ஸ் தளத்தில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
பிரதமர்மோடிபயணம்ஐரோப்பா