ஐநா சீர்திருத்தங்களை மீண்டும் வலியுறுத்துகிறது இந்தியா

ஐநா சீர்திருத்தங்களை மீண்டும் வலியுறுத்துகிறது இந்தியா

2 mins read
5ae6d13b-98c1-4276-99b3-5c15e4692d0c
ஐக்கிய நாட்டு நிறுவனத்துக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஹரிஷ் பர்வதனேனி. - படம்: விக்கிப்பீடியா
Google News Preferred Icon

புதுடெல்லி: ஐக்கிய நாட்டு நிறுவனத்தில் (ஐநா) விரிவான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

பன்முகத்தன்மையை வருங்காலத்துக்கு ஏற்றதாக அமைத்திட, ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பாதுகாப்பு மன்றம், பொதுச்சபை, பொருளியல், சமூக மன்றம் ஆகிய அமைப்புகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவது அவசியம் என்று ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஹரிஷ் பர்வதனேனி கூறினார்.

ஐநா பொதுச்சபையில் நடைபெற்ற அமைச்சர்நிலை வட்டமேசைக் கருத்தரங்கில் அவர் உரையாற்றினார்.

உலகளாவிய அமைப்புகள் தற்போதைய சமகால உண்மைநிலையை வெளிப்படுத்த வேண்டும் என்று தமது உரையில் அவர் குறிப்பிட்டார்.

உலகெங்கும் நடக்கும் மோதல்களைக் கட்டுப்படுத்த ஐநா பாதுகாப்பு மன்றம் தவறிவிட்டதால், அதன்மீதான பொதுமக்களின் கண்ணோட்டமும் நம்பிக்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் திரு பர்வதனேனி சொன்னார்.

1940களில் வடிவமைக்கப்பட்ட 80 ஆண்டுகள் பழைமையான ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் கட்டமைப்பு, தற்போதைய சவால்களை எதிர்கொள்ளப் போதுமானதாக இல்லை என்றார் அவர்.

அதனால், பாதுகாப்பு மன்றத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர ஐக்கிய நாட்டு நிறுவனத்தால் இயலவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு மன்றத்தின் கட்டமைப்பு மறுவடிவமைக்கப்பட வேண்டும் என்றும் பொதுச் சபை வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தி வருகிறது. அதற்கான சீர்திருத்தங்களுக்கு இந்தியாவின் கடப்பாட்டை திரு பர்வதனேனி மறு உறுதிப்படுத்தினார்.

நீடித்த நிலைத்தன்மையுடைய வளர்ச்சியை முன்னெடுக்கப் பொருளியல், சமூக மன்றத்தின் பங்கு அவசியமானது. மனிதகுலத்தின் எதிர்காலச் சவால்களைக் கையாள்வதற்கு ஏற்றவாறு உலகளாவிய நிறுவனங்களை மாற்றுவதற்கான அனைத்து உண்மையான முயற்சிகளையும் இந்தியா தொடர்ந்து ஆதரிக்கும் என்று திரு ஹரிஷ் பர்வதனேனி கூறினார்.

குறிப்புச் சொற்கள்