இலங்கை, பங்ளாதேஷுக்கு இந்தியா எரிபொருள் உதவி

இலங்கை, பங்ளாதேஷுக்கு இந்தியா எரிபொருள் உதவி

2 mins read
3339a0e5-5e5e-47fd-8e65-9910fe37f712
கொழும்பு நகரில் மார்ச் 18ஆம் தேதி எரிபொருள் நிரப்புவதற்காகக் காத்திருந்த ஓட்டுநர்கள் - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியா, அதன் அண்டை நாடுகளான இலங்கை, பங்ளாதேஷ் நாடுகளுக்கு எரிபொருளை அனுப்பி வைத்தது. இரு நாடுகளும், இந்தியாவிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க எரிபொருள் அனுப்பப்பட்டுள்ளது.

மேற்கு ஆசிய பூசலால் உலகம் முழுவதும் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவ்வாரம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்கவுக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு இந்தியா இலங்கைக்கு 38,000 மெட்ரிக் டன் எரிபொருளை அனுப்பியது. அவற்றில் 20,000 மெட்ரிக் டன் டீசல், 18,000 மெட்ரிக் டன் பெட்ரோல் உள்ளடங்கும் என்று கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“மேற்கு ஆசிய நிலவரம் குறித்து அதிபர் அனுர குமார திசநாயக்கவுடன் கலந்துரையாடினேன். குறிப்பாக எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது குறித்துப் பேசினேன். இந்தியா-இலங்கை எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் வட்டாரப் பாதுகாப்பை மேம்படுத்தவும் எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து நாங்கள் ஆய்வு செய்தோம். நெருங்கிய, நம்பகமான பங்காளிகளாக பொதுவான சவால்களை எதிர்கொள்வதில் நெருக்கமாக இணைந்து செயல்படுவதற்கான எங்களுடைய கடப்பாட்டை நாங்கள் மறுவுறுதிப்படுத்தினோம்,” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இந்தியா 15,000 டன் டீசலை விநியோகித்துள்ளதாக பங்ளாதேஷ் அதிகாரிகள் கூறினர். பங்ளாதேஷ் பிரதமர் டாரிக் ரஹ்மான், இத்தகைய முயற்சிகள் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவதற்கான அறிகுறிகள் என்று குறிப்பிட்டார்.

பங்ளாதேஷில் முகம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தின்போது இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மோசமடைந்தது.

தற்போதைய எரிசக்தி நிலவரத்தைக் கருத்தில் கொண்டு இந்தியாவிடம் எரிபொருள் விநியோகத்திற்கு கோரிக்கை விடுத்த அண்டை நாடுகளில் இலங்கையும் பங்ளாதேஷும் அடங்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சு கூறியது.

குறிப்புச் சொற்கள்