ஹோர்முஸ் நீரிணையில் தனது கப்பல்கள் தாக்கப்பட்டதற்கு இந்தியா எதிர்ப்பு

ஹோர்முஸ் நீரிணையில் தனது கப்பல்கள் தாக்கப்பட்டதற்கு இந்தியா எதிர்ப்பு

2 mins read
7f44227a-da63-4bc1-8ccf-117089f81168
ஓமானின் கடலோரப் பகுதியை ஒட்டிய ஹோர்முஸ் நீரிணையில் சனிக்கிழமை காணப்பட்ட கப்பல்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: ஹோர்முஸ் நீரிணையில் இந்தியாவின் இரண்டு கப்பல்கள் தொடர்பான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்திற்குப் புதுடெல்லியில் உள்ள ஈரான் தூதரிடம் இந்திய அரசாங்கம் நேரடியாக எதிர்ப்புத் தெரிவித்ததாக இந்திய வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.

அதற்காக, நேரில் வருமாறு ஈரான் தூதருக்கு இந்திய வெளியறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அழைப்பாணை விடுத்திருந்தார்.

அதனை ஏற்று நேரில் வந்த தூதரிடம் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கொடி தாங்கிய இரண்டு கப்பல்களை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்த இந்தியாவின் ஆழ்ந்த கவலையை, விக்ரம் மிஸ்ரி தெரிவித்ததாக அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

போர் நிறுத்தம் நடப்பில் இருக்கும்போது வர்த்தகக் கப்பல்களுக்காக ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கப்போவதாகக் கூறியிருந்த ஈரான், திடீரென தனது நிலையை மாற்றிக்கொண்டது.

நீரிணையைச் சுற்றி அமெரிக்கக் கப்பல்கள் நிறுத்தப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அது தனது முடிவை மாற்றிக்கொண்டதால், வர்த்தகக் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சனிக்கிழமை (ஏப்ரல் 18) நீரிணையைக் கடக்க முயன்ற பல வர்த்தகக் கப்பல்கள்மீது ஈரானியப் படைகள் துப்பாக்கிச்சூடு நடத்தி, மிரட்டல் விடுத்ததாகவும் பாதுகாப்புக் கண்காணிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

முன்னதாக, ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் கடற்பகுதியிலிருந்து நீரிணையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இந்தியச் சரக்குக் கப்பல், வழிமறிக்கப்பட்டுத் திருப்பிவிடப்பட்டது.

அதேபோல், இந்திய கச்சா எண்ணெய் கப்பலான தேஷ் சுரக்‌ஷாவும் ஈரானியப் படைகளால் திருப்பி அனுப்பப்பட்டது. அதனால், இந்தியக் கப்பல்கள் உள்பட ஏறத்தாழ 20 கப்பல்கள் ஓமன் நாட்டை நோக்கிச் செல்வதாகத் தகவல்கள் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்