புதுடெல்லி: உள்நாட்டில் சேவை வழங்கும் விமானங்கள் தரையிறங்குவதற்கும் நிறுத்துவதற்குமான கட்டணங்களை 25 விழுக்காடு குறைக்குமாறு இந்திய விமான நிலையங்கள் பொருளியல் கட்டுப்பாட்டு ஆணையம் அந்நாட்டின் முக்கிய விமான நிலையங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு, ஈரான் போர் காரணமாக நிதி நெருக்கடியை எதிர்நோக்கிவரும் இந்திய விமான நிறுவனங்களுக்கு ஒரு நற்செய்தியாகப் பார்க்கப்படுகிறது.
விமான நிலையங்கள் விதித்த சில வரிக் கட்டணங்கள் குறித்து விளக்கமளிக்குமாறு இண்டிகோ, ஏர் இந்தியா விமான நிறுவனங்கள் கேட்டுக்கொண்டிருந்தன. அதனைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பாகிஸ்தான்மீது பறக்கத் தடை விதிக்கப்பட்டிருப்பதால் இந்தியாவின் ஆகப் பெரிய விமான நிறுவனங்களான இண்டிகோவும் ஏர் இந்தியாவும் ஏற்கெனவே பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து ஈரான் போரால் அவ்விரு நிறுவனங்களும் கூடுதல் சிக்கல்களை எதிர்நோக்குகின்றன.
எரிபொருள் மற்றும் ஊழியர்களுக்கான செலவுக்கு அடுத்தபடியாக விமான நிலைய, விமானப் போக்குவரத்து ஆகியவற்றுக்கான செலவுதான் உலகளவில் விமான நிறுவனங்களுக்கு ஆக அதிகமாக இருந்து வருகிறது என்று விமான நிறுவன ஆதரவுக் குழுவான அனைத்துலக ஆகாயப் போக்குவரத்துச் சங்கம் தெரிவித்தது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இண்டிகோவின் பங்கு விலை வியாழக்கிழமை (ஏப்ரல் 8) 10 விழுக்காடு வரை கூடியது. ஏற்கெனவே அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே இரண்டு வாரப் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதையடுத்து ஒட்டுமொத்த விமானத் துறையும் மீண்டு வந்தது.

