வாளால் மகனை வெட்ட வந்தவர்களைக் கல்லால் விரட்டியடித்த வீரத்தாய் (காணொளி)

வாளால் மகனை வெட்ட வந்தவர்களைக் கல்லால் விரட்டியடித்த வீரத்தாய் (காணொளி)

1 mins read
0faf1f87-6dd9-49e3-9650-a2270193ff1e
ஸ்கூட்டரில் அமர்ந்திருந்தவரை வாளால் வெட்ட முயலும் ஆடவர். - காணொளிப்படம்
Google News Preferred Icon

கோல்ஹாப்பூர்: பட்டப்பகலில் தன் மகனை வாளால் வெட்ட வந்தவர்களைப் பெண் ஒருவர் கல்வீசித் துரத்தியடித்த சம்பவம் இந்தியாவில் நிகழ்ந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், கோல்ஹாப்பூரின் ஜெய்சிங்பூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 18) பிற்பகல் 1.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் கண்காணிப்புப் படக்கருவியில் பதிவாகியுள்ளது.

அதில், ஆடவர் ஒருவர் சாலையோரமாக ஸ்கூட்டரில் அமர்ந்தபடி தன் தாயுடன் பேசிக்கொண்டிருப்பது தெரிகிறது. சில நொடிகளில், ஆடவர் மூவர் ஸ்கூட்டரில் வந்திறங்குவதையும் அவர்களில் ஒருவர் வாளால் அந்த ஆடவரை வெட்ட முயல்வதையும் காணொளி காட்டுகிறது.

ஆயினும், நூலிழையில் அந்த ஆடவர் உயிர்தப்பினார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த ஆடவரின் தாயார் சற்றும் அஞ்சாமல் உடனடியாகச் செயலில் இறங்கினார்.

அருகிலிருந்த கல் ஒன்றை எடுத்து வாளால் வெட்ட வந்தவரை நோக்கி வீச முயன்றார். அவருடைய மகனும் கற்களை எடுத்து தன்னை வெட்ட வந்தவர்களை நோக்கி எறிய, அவர்கள் ஸ்கூட்டரில் ஏறித் தப்பினர்.

இதனையடுத்து, அந்த ஆடவரைத் தாக்க வந்த மூவர்மீதும் காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.

குற்றவாளிகளும் அந்த ஆடவரும் ஏற்கெனவே மோதிக்கொண்டதாகவும் அதனைத் தொடர்ந்து அம்மூவரும் அந்த ஆடவரைத் தாக்க முயன்றதாகவும் காவல்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்