கடல்துறைப் பாதுகாப்பு, ராணுவப் பயிற்சிகளை விரிவுபடுத்த இந்தியா, மலேசியா ஒப்புதல்

கடல்துறைப் பாதுகாப்பு, ராணுவப் பயிற்சிகளை விரிவுபடுத்த இந்தியா, மலேசியா ஒப்புதல்

2 mins read
d6b1c483-eda5-48aa-aa3d-79f568e03a71
இந்தியக் கடற்படை மற்றும் அரச மலேசியக் கடற்படைக்கு இடையிலான 11ஆவது அதிகாரிகள்நிலையிலான பேச்சுவார்த்தைகளும் புதுடெல்லியில் நடைபெற்றன. - படம்: த ஸ்டார்
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியாவும் மலேசியாவும் தங்களுக்கு இடையிலான தற்காப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான கடப்பாட்டை மறுஉறுதிப்படுத்தியுள்ளன.

புதுடெல்லியில் புதன்கிழமை (ஜூலை 1) நடைபெற்ற 12வது இந்திய-மலேசிய ராணுவ ஒத்துழைப்புக்கான துணைக் குழுக் கூட்டத்தில் அந்தக் கடப்பாடு செய்துகொள்ளப்பட்டது.

அந்தக் கூட்டத்தில் பேசப்பட்டது தொடர்பாகக் கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இருதரப்புத் தற்காப்பு ஒத்துழைப்பின் முழுப் பரிமாணங்களையும் இருதரப்பும் ஆராய்ந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியத் தற்காப்பு அமைச்சின் இணைச் செயலாளர் அமிதாப் பிரசாத்தும் மலேசிய ஆயுதப் படையின் தற்காப்புச் செயல்பாடு மற்றும் பயிற்சிப் பிரிவின் உதவித் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் அமர் மஹ்முத் அப்துல் ரஹ்மானும் அந்தக் கூட்டத்திற்குத் தலைமை ஏற்றனர்.

ராணுவப் பயிற்சி, கடல்துறைப் பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பு, பாதுகாப்புத் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இருதரப்பும் ஒப்புக்கொண்டன.

இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையிலான பரிமாற்றங்கள், இருதரப்புக் கூட்டுப் பயிற்சிகள், பயிற்சி நடவடிக்கைகள், அதிகாரிகளுடனான கலந்துரையாடல்கள், திறன் மேம்பாடு, வளர்ந்து வரும் துறைகளில் கூட்டுச் செயல்பாடு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள சீரான முன்னேற்றம் குறித்து மலேசியா, இந்தியா ஆகிய இருதரப்பினரும் மனநிறைவு தெரிவித்தனர்.

மேலும், நிபுணத்துவப் பரிமாற்றங்களை விரிவுபடுத்துதல், ராணுவப் பயிற்சிகளில் அதிகம் பங்கெடுத்தல், தற்காப்புத் தொழில்நுட்பம், இணையப் பாதுகாப்பு, மனிதாபிமான உதவிகள், பேரிடர் நிவாரணம், தற்காப்புத் தொழில்துறை போன்றவற்றின் வாயிலாக இருதரப்பும் தங்களுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த ஒப்புக்கொண்டன.

கூட்டத்தினிடையே இந்தியக் கடற்படை மற்றும் அரச மலேசியக் கடற்படைக்கு இடையிலான 11ஆவது அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று முடிந்தன.

அந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு இந்தியக் கடற்படையின் ரியர் அட்மிரல் ஸ்ரீனிவாஸ் மத்துலா மற்றும் அரச மலேசியக் கடற்படையின் ரியர் அட்மிரல் பஹ்லவான் முகமது ஃபட்லி கமால் முகம்மது மொஹால்தின் ஆகியோர் இணைந்து தலைமை தாங்கினர்.

குறிப்புச் சொற்கள்
ராணுவம்ஒத்துழைப்புகடல்துறை