வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா கட்டுப்பாடு

வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா கட்டுப்பாடு

1 mins read
1c4c9bc5-9830-41ba-9dd0-e0497c5cc62d
இந்தியாவில் வெங்காய விலை 50% கூடிவிட்ட நிலையில், அது மேலும் 40% அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

புதுடெல்லி: உள்நாட்டில் வெங்காய விலை உயர்ந்துவரும் நிலையில், வெங்காய ஏற்றுமதிக்கு இந்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

அதன்படி, ஒரு டன் வெங்காயத்திற்குக் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையாக 800 அமெரிக்க டாலர் (S$1,095) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை அக்டோபர் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.

இவ்வாண்டு இறுதிவரை இந்தக் குறைந்தபட்ச ஏற்றுமதி விலை நடப்பில் இருக்கும் என்று பயனீட்டாளர் விவகார அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

“சேமிப்பில் இருக்கும் வெங்காயத்தின் அளவு குறைந்து வருகிறது. இதனால், உள்நாட்டில் போதிய அளவு வெங்காயம் இருப்பிலுள்ளதை உறுதிசெய்யவும் பயனீட்டாளர்களுக்கு அது கட்டுப்படியான விலையில் கிடைப்பதை உறுதிசெய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என்று அமைச்சு விளக்கியுள்ளது.

உள்நாட்டில் சில்லறை விற்பனைச் சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.65 முதல் ரூ.80 வரை விற்கப்படுகிறது. இந்நிலையில், ஒரு கிலோ வெங்காயத்தின் குறைந்தபட்ச ஏற்றுமதி விலை கிட்டத்தட்ட 67 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, 500,000 டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நிலையில், கையிருப்பை அதிகப்படுத்த மேலும் 200,000 டன் கொள்முதல் செய்யப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் வெங்காயத்திற்கு 40 விழுக்காடு ஏற்றுமதி வரி அறிவிக்கப்பட்டது.

தலைநகர் டெல்லியில் அண்மைய நாள்களில் வெங்காய விலை 50 விழுக்காடு கூடிவிட்ட நிலையில், அடுத்த மாதம் இன்னும் 40 விழுக்காட்டிற்குமேல் உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக உள்ளூர் ஊடகச் செய்திகள் தெரிவித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்