போராடும் மாணவர்களை நான் அச்சுறுத்தவில்லை - மம்தா பானர்ஜி

போராடும் மாணவர்களை நான் அச்சுறுத்தவில்லை - மம்தா பானர்ஜி

2 mins read
0f0ee873-14a5-4d84-9888-a818e8728473
மேற்கு வங்காள முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி. - கோப்புப்படம்: ஊடகம்
Google News Preferred Icon

கோல்கத்தா: போராட்டம் நடத்தும் மாணவர்களை ஒருபோதும் அச்சுறுத்தவில்லை என மேற்கு வங்காள முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கோ, அவர்களின் இயக்கங்களுக்கோ எதிராக நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அவர்களுடைய போராட்டத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். அவர்களின் நோக்கம் உண்மையானது. சிலர் என்னைக் குற்றம் சாட்டுவது போல் நான் அவர்களை ஒருபோதும் அச்சுறுத்தவில்லை. இந்த குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது,” என்று மம்தா அந்தப் பதிவில் கூறியுள்ளார்.

புதிதாக உருவாக்கப்பட்ட சத்ர சமாஜ் என்ற மாணவர் அமைப்பினர், செவ்வாய்க்கிழமை நபன்னா அபியான் என்ற பெயரில் அரசை கண்டித்து தலைமைச் செயலகத்தை நோக்கிப் பேரணியாக செல்ல முற்பட்டனர். அப்போது நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மீது கற்கள் வீசப்பட்டன.

இதையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் பாதுகாப்புப் படையினர் அவர்களைக் கலைத்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். காவல்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்காளத்தில் 12 மணிநேர வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சி புதன்கிழமை அழைப்பு விடுத்தது.

இந்தப் போராட்டத்தின்போது சில இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின. போராட்டத்தில் பங்கேற்ற 1,350 பா.ஜ.க. ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டதாகவும், 210 பேர் காயமடைந்ததாகவும் பா.ஜ.க. தெரிவித்துள்ளது. இதனைக் கண்டித்து எஸ்பிளனேட் பகுதியில் பா.ஜ.க.வினர் 7 நாட்கள் குந்தியிருப்புப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

மேற்கு வங்காள மாநிலம் கோகத்தாவில் உள்ள ஆர்.ஜி. கார் மருத்துவமனையில் கடந்த 9ஆம் தேதி பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை கோல்கத்தா சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளது. அதே சமயம், பெண் மருத்துவரின் கொலைக்கு நீதி கேட்டும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் கோல்கத்தாவில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

குறிப்புச் சொற்கள்