பெண்களின் நிர்வாகத்தில் ‘நிழல் தலைவர்’களாகக் கணவர்கள்: அமைச்சு விரக்தி

பெண்களின் நிர்வாகத்தில் ‘நிழல் தலைவர்’களாகக் கணவர்கள்: அமைச்சு விரக்தி

2 mins read
04326e02-21d3-4413-876e-e0439d448640
இந்திய மாநிலங்கள் பலவற்றின் உள்ளாட்சிப் பதவிகளில் 50 விழுக்காட்டு இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. அதன் மூலம் சுமார் 1.4 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் (கிட்டத்தட்ட 46%) பிரதிநிதிகளாக உள்ளனர். - கோப்புப் படம்: பிடிஐ
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியாவில் கிராமப்புற, நகர்ப்புற நிர்வாகங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் ஏற்பாடு நடைமுறைக்கு வந்து முப்பதாண்டுகளைக் கடந்துவிட்ட நிலையிலும் முழுமையான பிரதிநிதித்துவம் பெண்களுக்குக் கிடைக்கவில்லை.

கிராமப்புறப் பஞ்சாயத்துகளை உள்ளடக்கிய உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றுத் தலைமைப் பொறுப்பை பெண்கள் ஏற்றாலும், நிர்வாகத்தில் அவர்களின் கணவன்மார்கள் தலையிடுவது தொடர்ந்து வருகிறது.

கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் பங்களிப்பு அரசியல் சட்டத்தின் 73வது திருத்தச் சட்டம் மூலம் 33 விழுக்காட்டு இடஒதுக்கீட்டுடன் தொடங்கப்பட்டது.

நாட்டின் பல மாநிலங்களில் 50 விழுக்காட்டு இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. இதன் மூலம் சுமார் 1.4 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் (கிட்டத்தட்ட 46%) பிரதிநிதிகளாக உள்ளனர்.

கிராமப் பஞ்சாயத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் தலைவர்களின் அதிகாரங்களை, அவர்களின் கணவர் அல்லது ஆண் உறவினர்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது ‘பஞ்சாயத்து கணவர்கள்’ (சர்பஞ்ச் பதி) என்று வடஇந்தியாவில் அழைக்கப்படுகிறது.

பெண்கள் பெயரளவிற்கு மட்டுமே தலைவர்களாக இருக்கும் நிலையில், பெரும்பாலான ஊர்களில் நிழல் தலைவர்களாக அவர்களின் கணவன்மார்கள் உள்ளனர். நிர்வாகப் பணிகளைக் கணவர்களே மேற்கொள்கின்றனர். இது சட்டவிரோதமான மற்றும் ஜனநாயகக் கொள்கைகளுக்கு முரணான செயல் என்று அரசுத்தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) மக்களவையில் எதிரொலித்தது.

தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளின் திறன் மேம்பாடு குறித்து பாஜக உறுப்பினர் ஸ்மிதா உதய் வாக் எழுப்பிய கேள்விக்கு அன்றைய தினம் எழுத்துபூர்வமாகப் பதில் அளிக்கப்பட்டது.

பெண் தலைவர்களின் நிர்வாகத்தைக் கணவர் கவனித்துக்கொள்ளும் ‘மாற்றுப் பிரதிநிதித்துவ’ நடைமுறை உள்ளாட்சி அமைப்புகளில் இன்றளவிலும் ஒரு பெரும் சிக்கலாக நீடிக்கிறது என்று பஞ்சாயத்து ராஜ் அமைச்சு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் கூறுகையில், உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் 2023 செப்டம்பரில் அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழு இதுகுறித்த விவகாரத்தை ஆய்வு செய்து 2025 பிப்ரவரியில் தனது அறிக்கையைச் சமர்ப்பித்ததாகவும் அதில் கூறப்பட்ட பரிந்துரைகளை அமைச்சு ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்