குஜராத்தைச் சூறையாடிய கனமழை: 22,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்

குஜராத்தைச் சூறையாடிய கனமழை: 22,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்

2 mins read
a9c7417a-9e01-4da8-b6ad-5e006dc6cfe7
அகமதாபாத்தில் வெள்ளம் சூழ்ந்த தெருவின் வழியே வாகனங்கள் செல்கின்றன. - படம்: பிடிஐ
multi-img1 of 2
Google News Preferred Icon

வல்சாத்: குஜராத் மாநிலத்தின் தெற்கு மாவட்டங்களான வல்சாத், சூரத், நவ்சாரி ஆகியவற்றில் புதன்கிழமை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருமளவு தேங்கியதால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வல்சாத் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அம்பர்கான் தாலுகாவில் 36 மணி நேரத்தில் 1,200 மில்லி மீட்டர் மழை பதிவானது.

இங்குத் தாழ்வான பகுதிகளில் வசித்த 12,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். நவ்சாரியில் 10,000 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தீவிர மீட்புப் பணி

நவ்சாரியில் வெள்ளத்தில் சிக்கித்தவித்த 50க்கும் மேற்பட்டோரை மீட்புக் குழுவினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். வல்சாத்தில் 1,200க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தேசிய, மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நவ்சாரி, வல்சாத் மாவட்டங்களில் ராணுவமும் களமிறக்கப்பட்டுள்ளது.

வல்சாத்தின் வாபி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பல கார்கள் நீரில் மூழ்கின. அகமதாபாத், கேடா மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது.

தோல்கா வட்டத்தில் 12 மணி நேரத்தில் 339 மி.மீ. மழை பதிவானது. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு உறுதி

மழை பாதிப்பு தொடர்பாக மாநில முதல்வர் பூபேந்திர படேலிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்.

அப்போது, பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மத்திய அரசு தேவையான உதவிகளை வழங்கும் எனப் பிரதமர் கூறினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மாநில அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.

குறிப்புச் சொற்கள்