புதுடெல்லி: ஹஜ்ஜுப் புனிதப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள், கூடுதலாக ரூ.10,000 செலுத்த இந்திய ஹஜ்ஜு அமைப்பு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
ஈரான் போர் காரணமாக அனைத்துலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 120 அமெரிக்க டாலர் வரை உயர்ந்துள்ளது. இதனால், விமான எரிபொருள் விலை அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், ஹஜ்ஜுப் பயணத்துக்கு விமானங்களை அனுப்பும் விமான நிறுவனங்கள், அடிப்படை கட்டணத்தை உயர்த்தி வழங்கும்படி ஹஜ்ஜு அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
இதையடுத்து இந்த ஆண்டு ஹஜ்ஜு பயணம் மேற்கொள்வோர், கூடுதல் கட்டணமான ரூ.10,000ஐ மே 15ஆம் தேதிக்குள் செலுத்தும்படி சிறுபான்மையினர் அமைச்சுக்குக்கீழ் செயல்படும் ஹஜ்ஜு அமைப்பு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஒவைசி, ‘‘பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பயணியிடமும் ஹஜ்ஜு குழு ஏற்கெனவே ரூ.90,000 வசூலித்துவிட்டது. அவர்களிடம் கூடுதலாக ரூ.10,000 செலுத்தும்படி கூறுவது நியாயம் இல்லை,” என்று தெரிவித்துள்ளார்.
“இந்தச் சுற்றறிக்கை உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும். கூடுதலாகப் பெறப்பட்ட பணம் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்,’’ என்றும் அவர் சாடியுள்ளார். இதற்குச் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ விளக்கம் அளித்துள்ளார்.
‘‘விமான எரிபொருள் கட்டண உயர்வால், ஒவ்வொரு பயணிக்கும் 300 முதல் 400 டாலர் வரை விமானப் பயணக் கட்டணத்தை உயர்த்துமாறு விமான நிறுவனங்கள் கேட்கின்றன. எரி பொருள் கட்டண உயர்வுக்கு, விமான நிறுவனங்களை நாம் குறைகூற முடியாது. பேச்சுவார்த்தை மூலம் ஒவ்வொரு பயணியிடமும் ரூ.10,000 (100 டாலர்) மட்டும் கூடுதல் தொகை வசூலிக்க முடிவு செய்யப்பட்டது,’’ என்றார் அவர்.

