‘எச்1பி’ விசா கட்டண உயர்வு ரத்து: நீதிமன்ற உத்தரவால் இந்தியர்கள் நிம்மதி

‘எச்1பி’ விசா கட்டண உயர்வு ரத்து: நீதிமன்ற உத்தரவால் இந்தியர்கள் நிம்மதி

2 mins read
336d65f1-1e44-4683-8d93-8f1ed8bc30c9
உயர் திறன் கொண்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களை ஈர்ப்பதற்கு இந்தக் கட்டண உயர்வு தடையாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவித்திருந்தனர். - கோப்புப் படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா
Google News Preferred Icon

புதுடெல்லி: ‘எச்1பி’ விசா கட்டணத்தை உயர்த்தும் அதிகாரம் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கு இல்லை என அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது அதிபர் டிரம்ப்புக்குப் பின்னடைவாகக் கருதப்படும் நிலையில், அவர் தனது சட்டபூர்வ அதிகாரங்களுக்கு உட்பட்டே செயல்பட்டார் என்று வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

மேலும், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 2 லட்சமாக இருந்த ‘எச்1பி’ விசா கட்டணத்தை, டிரம்ப் நிர்வாகம் ரூ. 90 லட்சமாக உயர்த்தி அதிரடி உத்தரவைப் பிறப்பித்தது. இதை எதிர்த்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டன.

உயர் திறன் கொண்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களை ஈர்ப்பதற்கு இந்தக் கட்டண உயர்வு தடையாக இருக்கும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்நிலையில், மாசசூசெட்ஸின் பாஸ்டனில் உள்ள கூட்டாட்சி நீதிமன்றம் திங்களன்று, டிரம்ப் நிர்வாகத்தின் விசா கட்டண உயர்வை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், அது சட்டவிரோதமானது என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

‘எச்1பி’ விசா மூலம் அமெரிக்கா செல்லும் வெளிநாட்டவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம். எனவே, விசா கட்டண உயர்வு இந்தியர்களை வெகுவாக பாதிக்கும் எனக் கவலை நிலவியது.

கடந்த 2024ஆம் ஆண்டு அமெரிக்கா வழங்கிய எச்1பி விசாக்களில் ஏறக்குறைய 70%, இந்திய ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், சீனர்களுக்கு 11-12% என்ற மிகக் குறைந்த அளவில் எச்1பி விசா வழங்கப்பட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா வாழ் இந்தியர்கள் சிறந்த கல்வியும் அதிக வருமானமும் பெறுவதற்கு எச்1பி விசா திட்டமே முக்கியக் காரணம் எனச் சில ஆய்வுகள் கூறுகின்றன.

இந்நிலையில், பல்லாண்டுகளாக எச்1பி விசா திட்டம் தவறாகப் பயன்பட்டு வருவதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டெய்லர் ரோஜர்ஸ் கூறியதாக பிடிஐ செய்தி முகைமை குறிப்பட்டுள்ளது.

அண்மைய நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீட்டு நீதிமன்றத்தை அணுக இருப்பதாகவும் வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காஎச்1பிவிசாநீதிமன்றம்