மின்சார அடுப்புகளைப் பயன்படுத்த ஹோட்டல், உணவகங்களுக்கு அரசு வலியுறுத்து

மின்சார அடுப்புகளைப் பயன்படுத்த ஹோட்டல், உணவகங்களுக்கு அரசு வலியுறுத்து

2 mins read
a4656188-4b67-4437-a75b-c6a4d8c45583
ஹோட்டல்கள், மின்சார அடுப்புகளைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறது. - கோப்புப் படம்: மாலை மலர்
Google News Preferred Icon

சென்னை: தமிழ்நாட்டில் ஹோட்டல்களும் உணவகங்களும் மின்சார அடுப்புகள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு மின்விநியோகக் கழகம் (டிஎன்பிடிசிஎல்) அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மத்திய அரசாங்கத்தின் அறிவுறுத்தலின்படி, மின்பயன்பாட்டு முறைக்கு மாற விரும்பும் வணிக நிறுவனங்கள் புதிய மின் இணைப்பு கோரியோ அல்லது கூடுதல் மின்சார ஆற்றல் கோரியோ விண்ணப்பித்தால், அதற்கு முன்னுரிமை வழங்கி உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து மின்விநியோக நிறுவனங்களுக்கும் டிஎன்பிடிசிஎல் ஞாயிற்றுக்கிழமை அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி, தமிழ்நாடு மின்விநியோகக் கழகத்தின் விநியோகப் பிரிவு இயக்குநர், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுக்கும் அவசர உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அதில், வணிக நிறுவனங்களின் புதிய மின் இணைப்பு, கூடுதல் மின் ஆற்றல் கோரிக்கைகளை உடனே பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடியாக குவைத், பஹ்ரேன்மீது ஈரான் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து வளைகுடா வட்டாரத்தில் போர்ப் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக எரிவாயு உள்ளிட்ட பெட்ரோலியப் பொருள்களுக்கான தேவை உலக அளவில் திடீரென அதிகரித்துள்ளது.

பெட்ரோல், டீசல், எரிவாயு தட்டுப்பாடு வந்துவிடுமோ என்று பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று மத்திய மின்சாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

அதே நேரத்தில், மக்கள் எரிவாயு உருளைக்கு மாற்றாக குழாய் மூலம் விநியோகிக்கப்படும் எரிவாயு, மின்சார சமையல் அடுப்புகளை பயன்படுத்துமாறு மத்திய அரசு ஊக்குவிக்கிறது.

இது பற்றி பேசிய மின்சக்தித் துறையின் உயர் அதிகாரி ஒருவர், “எரிவாயு சமையலில் இருந்து மின்சார அடுப்புக்கு மாறும் இந்தத் திட்டம், வளைகுடாப் பகுதி பதற்றத்திற்கு முன்பே தொடங்கப்பட்ட ஒரு தொடர் நடவடிக்கையாகும். இந்த விண்ணப்பங்களை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விரைந்து முடிக்க தலைமைப் பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,” என்றார்.

‘டான்ஜெட்கோ’ அமைப்பின் தலைவரும் மேலாண் இயக்குநருமான ஜெ. ராதாகிருஷ்ணன், “புதிய மின் இணைப்பு மற்றும் கூடுதல் மின் ஆற்றல் கோரிக்கைகளை விரைந்து முடிக்கும் இந்த அதிரடி நடவடிக்கையால் வணிக நிறுவனங்கள் அனைத்தும் சுற்றுச்சூழல் மாசு இல்லாத தூய்மையான எரிசக்திக்கு மாறுவதற்கான ஒரு அரிய வாய்ப்பாகும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்