‘ககன்யான்’ திட்டம்: சோதனை விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது

‘ககன்யான்’ திட்டம்: சோதனை விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது

2 mins read
7403ffb2-7b94-4ab9-b2bc-d3386e64f183
சோதனை விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட நிகழ்வின் நேரடி ஒளிபரப்பைத் தொலைக்காட்சியில் காண்கிறார் இந்தக் காவலர். - படம்: இபிஏ
multi-img1 of 3
Google News Preferred Icon

புதுடெல்லி: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தின் முதற்கட்டமாக, ஆளில்லா மாதிரி விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் (இஸ்ரோ) சனிக்கிழமை காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

தொடக்கத்தில், இந்திய நேரப்படி காலை 8 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள ஏவுதளத்திலிருந்து அது விண்ணில் பாய்வதாக இருந்தது.

ஆனால், வானிலை காரணமாக 8.30 மணிக்கும் பின்னர் 8.45 மணிக்கும் அது தள்ளிவைக்கப்பட்டது.

ஆயினும், அந்த மாதிரி விண்கலம் விண்ணில் பாயத் தயாராக ஐந்து நொடிகளே இருந்த நிலையில், அம்முயற்சி தள்ளிவைக்கப்பட்டது.

“டிவி-டி1 சோதனை விண்கலம் இன்று (சனிக்கிழமை) விண்ணில் செலுத்தப்படவில்லை. தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட சிறு கோளாறே இதற்குக் காரணம். என்ன தவறு நிகழ்ந்தது என்பது கண்டறியப்பட வேண்டியுள்ளது. சோதனை விண்கலம் பாதுகாப்பாக உள்ளது,” என்று இஸ்ரோ தலைவர் சோமநாத் கூறினார்.

இந்நிலையில், கோளாறு சரிசெய்யப்பட்டு, 10 மணிக்கு அந்தச் சோதனை முயற்சி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அது சார்ந்த இஸ்ரோ அறிவியல் வல்லுநர்கள் குழுவையும் அவர் பாராட்டினார்.

மனிதர்களை விண்வெளிக்கு சுமந்து செல்லும் விண்கலத்தின் மாதிரிக் கலம், தரையில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவுவரை அனுப்பப்பட்டது. அங்கு சென்றதும் விண்கலத்தில் வீரர்கள் அமரும் பகுதி தனியாகப் பிரிக்கப்பட்டது. பின்னர் அது வான்குடைகள் மூலமாக இந்தியாவின் கிழக்குக் கடலோரமாக, அதாவது ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து கிட்டத்தட்ட 10 கி.மீ. தொலைவில் வங்கக்கடலில் பாதுகாப்பாக இறக்கப்பட்டது. கடலில் விழுந்த விண்கலத்தை இந்தியக் கடற்படையின் சிறப்புக் கப்பல் மற்றும் நீச்சல் குழுவினர் மீட்டு இஸ்ரோவிடம் ஒப்படைப்பர் எனத் தெரிவிக்கப்பட்டது.

மொத்தம் 8.8 நிமிடங்களே இந்தச் சோதனை முயற்சி நீடித்தது.

ஏதேனும் ஒருசூழலில் விண்கலம் கட்டுப்பாட்டை இழக்க நேர்ந்தால், அதில் உள்ள வீரர்களை பாதுகாப்பாக மீட்பது தொடர்பில் இந்தச் சோதனையோட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதற்குமுன் அமெரிக்கா, ரஷ்யா, சீனா என மூன்று நாடுகள் மட்டுமே மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளன. இந்நிலையில், 2025ஆம் ஆண்டில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்