மேலும் 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ‘எஸ்ஐஆர்’

மேலும் 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ‘எஸ்ஐஆர்’

2 mins read
e165b9ad-5448-498e-9cf8-f838fd9fc607
எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. - கோப்புப் படம்: இந்தியா டுடே

புதுடெல்லி: நாடு முழுவதும் 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ‘எஸ்ஐஆர்’ எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக 22 மாநிலங்களுக்கும் கடிதம் எழுதியுள்ள ஆணையம், ‘எஸ்ஐஆர்’ நடவடிக்கை ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளதால் அதற்குரிய ஏற்பாடுகளை விரைவில் நிறைவு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

நாடு முழுவதும் ‘எஸ்ஐஆர்’ நடவடிக்கையை மேற்கொள்ள கடந்த ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிடப்பட்டது. பீகார், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்த உத்தரவு செயல்படுத்தப்பட்டது. எனினும், எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

எனினும், எதிர்ப்புகளை மீறி மேற்கொள்ளும் மேற்கு வங்கம், அசாம், மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கா், கோவா, புதுவை, அந்தமான் நிகோபாா் தீவுகள், லட்சத்தீவு ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்ட எஸ்ஐஆா் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நடவடிக்கைக்குப் பிறகு கேரளாவில் பிப்ரவரி 21ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

மேலும், தமிழகத்தில் பிப்ரவரி 23ஆம் தேதியும் மேற்கு வங்கத்தில் 28ஆம் தேதியும் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும்.

இந்நிலையில், நாட்டில் எஞ்சியுள்ள 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ‘எஸ்ஐஆா்’ நடவடிக்கையை ஏப்ரல் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளதால் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு மாநில நிர்வாகங்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

இந்தப் பணி நிறைவடைந்தால், நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் ‘எஸ்ஐஆர்’ நடவடிக்கை முழுமையாக நிறைவடையும்.

குறிப்புச் சொற்கள்