புதுடெல்லி: இந்தியா, நியூசிலாந்து இடையே திங்கட்கிழமை (ஏப்ரல் 27) தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
இத்தகவலை இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்தின் வர்த்தக முதலீட்டு அமைச்சர் டோட் மெக்கிளே தம் துணைவியார் நதீனுடன் அரசுமுறைப் பயணமாக இந்தியா சென்றுள்ளார்.
இத்தம்பதியர் சனிக்கிழமை (ஏப்ரல் 25) உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை நேரில் கண்டு ரசித்தனர். அவருடன் அமைச்சர் பியூஷ் கோயல் தம்பதியரும் சென்றிருந்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திரு பியூஷ் கோயல், இந்தியா-நியூசிலாந்து இடையேயான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து நீண்ட காலமாகப் பேச்சுவார்த்தை நடந்ததாகக் குறிப்பிட்டார்.
தற்போது அந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு கையெழுத்தாக உள்ளதாகத் தெரிவித்த அவர், இந்த ஒப்பந்தம் காரணமாக, இந்தியாவிலிருந்து நியூசிலாந்துக்குச் செல்லும் 70% பொருள்கள் எந்தவித இறக்குமதி வரியும் இன்றி அங்குச் சென்றடையும் எனக் குறிப்பிட்டார்.
இந்த ஒப்பந்தம் பல துறைகளுக்கு, குறிப்பாக பாரம்பரிய மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு புதிய ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் திரு கோயல் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆக்ரா தோல் வணிகம், உத்தரப் பிரதேசக் கைத்தறி, கைவினைப் பொருள்கள், தச்சர்கள், கைவினைக் கலைஞர்கள் உள்ளிட்ட பல துறைகளில் புதிய வாய்ப்புகள் உருவாகும் என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
“சில மாதங்களில் இது இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான வர்த்தகத்தை அதிகரிப்பதற்கான ஒரு வழியாக அமையும். இந்தத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏற்றுமதி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதுடன் இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்தும்,” என்று அமைச்சர் கோயல் உறுதியாகத் தெரிவித்தார்.

