நீதிமன்றத்தில் பெண் நீதிபதிக்குக் கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் ஆசிரியர்

நீதிமன்றத்தில் பெண் நீதிபதிக்குக் கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் ஆசிரியர்

2 mins read
d097fe99-2b62-4089-9e27-5f15b3727810
குற்றம் சாட்டப்பட்ட ஓய்வுபெற்ற ஆசிரியரைக் குற்றவாளி என அறிவித்த நீதிபதி. - படம்: பிக்சாபே
Google News Preferred Icon

புதுடெல்லி: புதுடெல்லியில் காசோலை மோசடி வழக்கில் தீர்ப்பளித்த பெண் நீதிபதிக்குக் குற்றஞ்சாட்டப்பட்டவர் கொலை மிரட்டல் விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நபர், “நீதிமன்றத்தைவிட்டு நீ வெளியேதானே வந்தாக வேண்டும். எப்படி வீட்டுக்கு உயிருடன் போகிறாய் என நான் பார்க்கிறேன்,” என மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

புதுடெல்லி துவரகா நீதிமன்றத்தில் நீதிபதி சிவாங்கி மங்களா, ஏப்ரல் 2ஆம் தேதி, 6 ஆண்டு கால காசோலை மோசடி வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்தார்.

அதில் அவர், குற்றம் சாட்டப்பட்ட ஓய்வுபெற்ற ஆசிரியரைக் குற்றவாளி என அறிவித்தார்.

இதனால் குற்றவாளியும் அவரது வழக்கறிஞரும் நீதிபதிமீது ஆத்திரமடைந்தனர்.

அந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் நீதிபதிக்குக் கொலை மிரட்டல் விடுத்ததுடன் தனது கையில் வைத்திருந்த பொருளையும் நீதிபதிமீது வீச முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து நீதிபதி ஷிவாங்கி பிறப்பித்த உத்தரவில், “குற்றவாளியும் அவரது வழக்கறிஞரும் என்னைப் பதவியை விட்டு விலகுமாறுகூறி மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தினர். குற்றவாளியை விடுவிக்காவிட்டால் என்மீது புகார் அளித்துப் பணியை விட்டு விலகுமாறு செய்வோம் என்று மிரட்டினர்.

“எனவே குற்றவாளிமீது தேசிய மகளிர் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது வழக்கறிஞர் அதுல் குமாரின் தவறான நடத்தைக்காக அவருக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்கப் புதுடெல்லி உயர் நீதிமன்றத்திற்கு ஏன் பரிந்துரைக்கக் கூடாது என்பதற்கான விளக்கத்தை அதுல்குமார் எழுத்துப்பூர்வமாக அளிக்கவேண்டும்,” என்று கூறியுள்ளார்.

அச்சம்பவம் நடந்த மூன்று நாள்களுக்குப் பிறகு காசோலை மோசடி வழக்கில் அந்த முன்னாள் ஆசிரியருக்கு 22 மாத சிறை தண்டனையும் ரூ.6.65 லட்சம் அபராதமும் நீதிபதி விதித்தார்.

குறிப்புச் சொற்கள்