பீகாரில் தீப்பிடித்த விரைவு ரயில்; பயணிகள் பதற்றம்

பீகாரில் தீப்பிடித்த விரைவு ரயில்; பயணிகள் பதற்றம்

1 mins read
முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணம் எனத் தகவல்
a550a77d-4146-4126-8b14-7ffa2563c4e3
ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தால் பயணிகள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவியது. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. - படம்: என்டிடிவி
Google News Preferred Icon

புதுடெல்லி: பீகார் மாநிலம், சசாரம் ரயில் நிலையத்தில் இருந்து பாட்னா நோக்கிச் செல்லவிருந்த பயணிகளுக்கான விரைவு ரயில் ஒன்றில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

ரயில் பெட்டியிலிருந்து அடர்ந்த புகை வெளியேறுவதும் ஊழியர்கள் தீயைக் கட்டுப்படுத்துவதற்குப் போராடுவதும் காணொளிக் காட்சிகளில் பதிவாகியுள்ளன.

முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

சசாரம் - பாட்னா விரைவுப் பயணிகள் ரயில், சசாரம் ரயில் நிலையத்தின் 6வது நடைமேடையில் இருந்து புறப்படுவதற்குச் சற்று நேரத்திற்கு முன்பு அதன் ஒரு பெட்டியில் தீப்பிடித்தது.

அந்த விபத்து நடைமேடையில் இருந்த பயணிகள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது. எனினும், அதில் யாருக்கும் காயமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்தடுத்து நிகழும் ரயில் தீ விபத்துகள்

மத்தியப் பிரதேசத்தின் ரத்லாம் பகுதியில், டெல்லி நோக்கிச் சென்றுகொண்டிருந்த ராஜ்தானி விரைவு ரயிலின் குளிரூட்டிப் பெட்டி ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதிலிருந்து 68 பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

அந்தச் சம்பவம் நடந்த அடுத்த நாளே பீகாரிலும் ரயில் தீப்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரயிலிலிருந்து பிரிக்கப்பட்ட பெட்டியிலிருந்து கரும்புகையும் தீப்பிழம்புகளும் வானுயரத்திற்கு எழுவது போன்ற காணொளிக் காட்சிகள் வெளியாகின.

மேலும், ரயில் தண்டவாளத்திற்கு அருகில் இருந்த சில மரங்களுக்கும் தீ பரவியது.

குறிப்புச் சொற்கள்