குரங்குகளிடமிருந்து பயிர்களைக் காக்க கரடி வேடமிடும் விவசாயிகள்

குரங்குகளிடமிருந்து பயிர்களைக் காக்க கரடி வேடமிடும் விவசாயிகள்

1 mins read
2cc2d309-a230-4a45-8ee6-73c76c1c12ee
குரங்குகளை விரட்ட கரடி வேடமிட்டுள்ள விவசாயி. - படம்: ஏஎன்ஐ
Google News Preferred Icon

சம்பல்: தங்கள் பயிர்களைக் குரங்குகள் நாசப்படுத்துவதைத் தடுக்க விவசாயிகள் கரடி உடைகளை அணிந்து அவற்றை அச்சுறுத்தி விரட்டி வருகின்றனர்.

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தில் உள்ள பிரோஸ்பூர் எனும் சிற்றூரைச் சேர்ந்த விவசாயிகளே இந்தப் புதுமையான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

குரங்குகளின் தொல்லை, மிகுந்த அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதாகவும் அவை உருளைக்கிழங்கு, ஸ்ட்ராபெர்ரி போன்ற பயிர்களை அழித்து வருவதாகவும் தர்ம்பீர் என்ற விவசாயி வேதனையுடன் கூறினார்.

“இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. அதனால், விவசாயிகள் கரடி வேடமிட்டு அவற்றை அச்சுறுத்தி வருகின்றனர். கரடி வேடமிட்டுள்ள விவசாயிகளைக் கண்டு அவை ஓடிவிடுகின்றன. தற்போது எங்களில் சிலர் இந்த முறையைக் கையாண்டு வருகின்றனர்,” என்று அவர் விளக்கினார்.

இது ஒரு தற்காலிக ஏற்பாடுதான் என்றும் இப்பிரச்சினைக்கு அரசு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, குரங்குகளை ஓரிடத்திலிருந்து விரட்டினால் அவை வேறோர் இடத்திற்குச் சென்றுவிடுகின்றன என்று வனக் காவலர் மனோஜ் குமார் தெரிவித்தார்.

குரங்குகளைப் பிடித்துக் காட்டில் விடுவதற்கு முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், அவ்விலங்குகளைப் பிடிப்பதற்குத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் வனத்துறை எடுக்கும் என்றும் உறுதியளித்தார்.

குறிப்புச் சொற்கள்