மும்பை: இசைப் பேரரசி என்று கொண்டாடப்படும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார். அவருக்கு வயது 92.
கடந்த சில நாள்களாக உடல்நலம் குன்றியிருந்த அவர், மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மாரடைப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) அவர் காலமானதாகவும் அவரது இறுதிச்சடங்கு திங்கட்கிழமை நடைபெறும் என்றும் குடும்பத்தார் தெரிவித்தனர்.
ஆஷா போஸ்லே மறைவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் திரவுபதி முர்மு உள்ளிட்ட தலைவர்களும் திரைத்துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
“காலத்தால் அழியாத குரல்” என்று திரு மோடி தமது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
காலஞ்சென்ற பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கரின் இளைய சகோதரியான ஆஷா போஸ்லேவும் இசைத்துறையில் கோலோச்சினார்.
கடந்த 1933ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் சாங்கிலியில் செப்டம்பர் 8ஆம் தேதி பிறந்த ஆஷா, இசை வரலாற்றில் அதிக பாடல்களை பாடியவர் என்ற கின்னஸ் சாதனையை படைத்தவர்.
ஏறக்குறைய 80 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி எனப் பல்வேறு இந்திய மொழிகளில் ஏறக்குறைய 12,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இரு தேசிய விருதுகள், தாதா சாகேப் பால்கே, பத்ம விபூஷண் உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை பெற்றவர் இவர்.
தமிழில் ‘செண்பகமே செண்பகமே’ (எங்க ஊரு பாட்டுக்காரன்), ‘செப்டம்பர் மாதம்’ (அலைபாயுதே), ‘கொஞ்ச நேரம்’ (சந்திரமுகி), ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி’ (ஹே ராம்) உள்ளிட்ட பல பாடல்களைப் பாடியுள்ளார்.
புகழ்பெற்ற இசைக் குடும்பத்தில் பிறந்த இவர், செவ்வியல் இசைக்கலைஞர் தீனநாத் மங்கேஷ்கரின் புதல்வியும், ‘இசைக்குயில்’ லதா மங்கேஷ்கரின் இளைய சகோதரியும் ஆவார். அவரது உடன்பிறப்புகளான உஷா மங்கேஷ்கர், ஹிருதயநாத் மங்கேஷ்கர் ஆகியோரும் இந்திய இசையில் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
ஆஷா போஸ்லே முதலில் கணபத்ராவ் போஸ்லேவை மணந்தார். அவரின் மறைவுக்குப் புறகு புகழ்பெற்ற இசை அமைப்பாளர் ஆர்.டி.பர்மனை மணந்தார். இவருக்கு ஹேமந்த், வர்ஷா, ஆனந்த் ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

