தேர்தலில் முக, அங்க அடையாளம்: ஆராய உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

தேர்தலில் முக, அங்க அடையாளம்: ஆராய உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

2 mins read
3dd2aad1-82f0-4644-af57-1881ba9380b6
2024ஆம் ஆண்டு, குஜராத்தில் நடந்த பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்காக வரிசையில் காத்திருந்த மக்கள். - கோப்புப்படம்: புளூம்பெர்க்

புதுடெல்லி: தேர்தலில் முறைகேடுகளைத் தடுக்க, வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு முன்னதாக அவர்களின் முக, அங்க அடையாளங்களை ‘பயோமெட்ரிக்’ முறைப்படி சரிபார்ப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை (ஏப்ரல் 13) ஒப்புக்கொண்டது.

இது தொடர்பான பொதுநல மனுவை விசாரித்த நீதிமன்றம், மத்திய அரசுக்கும் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும் கடிதம் அனுப்ப உத்தரவிட்டது.

நாடாளுமன்ற, மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களின்போது, வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களை ‘பயோமெட்ரிக்’ முறையில் அடையாளம் காண உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதி ஜாய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு அவ்வழக்கை ஏப்ரல் 13ஆம் தேதி விசாரித்தது.

அப்போது, அத்தகைய முறையை உடனடியாகச் செயல்படுத்த முடியாது என்றும் அதற்குச் சட்டக் கட்டமைப்பில் மாற்றங்கள் தேவைப்படும் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

மேலும், “இந்தக் கோரிக்கைகளை வரவிருக்கும் தேர்தல்களுக்குப் பரிசீலிக்க முடியாது. ஆனால், அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் அல்லது மாநிலத் தேர்தல்களுக்குப் பின்பற்றுவது அவசியமா என்பதை ஆராய வேண்டும். எனவே, சம்பந்தப்பட்ட துறைக்குக் கடிதம் அனுப்ப உத்தரவிடுகிறோம்,” என அது வெளியிட்ட உத்தரவில் குறிப்பிட்டது.

அந்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் முதலில் தயக்கம் காட்டியது. வழக்கறிஞர் உபாத்யாயைத் தேர்தல் ஆணையத்தை அணுகுமாறு அது பரிந்துரைத்தது.

இருப்பினும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் அம்முறையைப் பயன்படுத்த தான் வலியுறுத்தவில்லை என்றும் வருங்காலத் தேர்தல்களுக்கு அதனைப் பரிசீலிக்கலாம் என்றும் மனுதாரர் உபாத்யாய் அழுத்தமாகக் கூறினார்.

மேலும், அத்தகைய முறையைத் திறம்படச் செயல்படுத்த மாநில அரசுகளின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் தமது மனுவில் குறிப்பிட்டார்.

அதன்பிறகு, இந்த விவகாரத்தை விரிவாக ஆராய நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்