சாதிய பாகுபாட்டிற்கு முற்றுப்புள்ளி: அரசு சார்பில் முடி திருத்தகம் திறப்பு

சாதிய பாகுபாட்டிற்கு முற்றுப்புள்ளி: அரசு சார்பில் முடி திருத்தகம் திறப்பு

1 mins read
09aa02d4-9bf8-4f8a-9a7d-56ce8232012a
கர்நாடகாவின் சிங்கத்தலூர் கிராமத்தில் தீண்டாமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசு சார்பில் முடி திருத்தும் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.  - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

பெங்களூரு: கர்நாடக மாநிலம், கதக் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு முடி திருத்தம் செய்துவிட மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்தப் பிரச்சினைக்கு நல்ல ஒரு தீர்வு காணும் வகையில் அம்மாநில அரசே நேரடியாக முடி திருத்தும் நிலையத்தை அங்கு தொடங்கியுள்ளது. இது, சமூக ஆர்வலர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

கதக் மாவட்டம், சிங்கத்தலூர் கிராமத்தில் உள்ள தனியார் முடி திருத்தும் நிலையங்களில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு முடி வெட்டக்கூடாது என அங்குள்ள உயர் சாதி வகுப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்தத் தீண்டாமைக் கொடுமை குறித்து புகார்கள் எழுந்ததையடுத்து, மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் களத்தில் இறங்கினர்.

சமூகத்தில் நிலவும் இந்தச் சாதியப் பாகுபாட்டை ஒழிக்க, சமூக நலத்துறை அமைச்சர் எச்.சி. மகாதேவப்பாவைச் சந்தித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

அமைச்சரின் ஒப்புதல் கிடைத்ததைத் தொடர்ந்து, சிங்கத்தலூர் கிராமத்தில் வரலாற்றுச் சிறப்பாக அரசு சார்பிலான முடி திருத்தும் நிலையம் இப்போது திறக்கப்பட்டுள்ளது.

அனைத்துத் தரப்பு மக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையால், அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அரசின் இந்த முன்மாதிரியான செயல், தீண்டாமைக்கு எதிரான ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
சமூக ஆர்வலர்கொடுமைஅமைச்சர்ஒப்புதல்