புதுடெல்லி: மூளைச்சாவு அடைந்த ஆடவரின் இதயம், அடுத்த 50 நிமிடங்களில் மற்றொருவருக்குப் பொருத்தப்பட்டது. இதற்காக அகற்றப்பட்ட அந்த இதயம் 90 கிலோமீட்டர் தூரம் கொண்டு செல்லப்பட்டது.
ஹரியானாவைச் சேர்ந்தவர் குல்தீப். 37 வயதான இவர், சிறை வார்டனாகப் பணியாற்றி வந்தார்.
11 மாதங்களுக்கு முன்பு தனது இடக் கண்ணில் அவ்வப்போது வலி ஏற்படுவதாகக் கூறிய அவருக்கு, மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், அவருக்கு மூளையில் கட்டி இருப்பது தெரியவந்ததால் உடனடியாக தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். எனினும், முன்னேற்றம் ஏதுமில்லை.
இதையடுத்து, ஏப்ரல் 8ஆம் தேதி ஹரியானாவின் ரோதக் பகுதியில் உள்ள பிஜிஐஎம்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் குல்தீப். சில பரிசோதனைகளுக்குப் பிறகு, மறுநாள் அவர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க குல்தீப் குடும்பத்தாருக்கு மருத்துவர்கள் ஊக்கமளித்தனர்.
இதையடுத்து, அவரது மனைவி பிரோமிலா கணவரது உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க முன்வந்தார்.
குல்தீப்பின் உடல் உறுப்புகளை அகற்றும் நடைமுறை கடந்த திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்குத் தொடங்கி 7.30 மணி வரை நடைபெற்றது.
தன் கணவரால் பலர் மறுவாழ்வு பெற்றதை எண்ணி மனநிறைவு அடைந்தாலும், கணவரது நான்கு மாத ஊதியம் இன்னும் தமக்கு வழங்கப்படவில்லை என்று கூறியுள்ளார் பிரோமிலா. மாநிலச் சிறைத்துறை எந்த உதவியும் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
குல்தீப்பின் மூத்த மகன் பாருல் மருந்தாளுநர் படிப்பும் மகள் தனு ஆசிரியர் பணிக்கான பயிற்சியும் பெற்று வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
முன்னதாக, தானமாகப் பெறப்பட்ட இதயத்தை ரோதக் பகுதி மருத்துவமனையில் இருந்து ஓக்லா பகுதி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல முடிவு செய்யப்பட்டது.
இரு மருத்துவமனைகளுக்கும் இடையேயான தூரம் 90 கிலோமீட்டர் என்பதால், இதயத்தை விரைவாகக் கொண்டுசெல்லப் போக்குவரத்துக் காவல்துறை உதவிக்கரம் நீட்டியது.
ஓர் ‘ஆம்புலன்ஸ்’ வாகனத்தில் ரோதக் பகுதியில் இருந்து கொண்டுசெல்லப்பட்டபோது, வழிநெடுகிலும் காவல்துறையினர் தடையற்ற போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
50 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் ஓக்லா பகுதி மருத்துவமனையைச் சென்றடைந்தது. அங்கு இதயச் செயலிழப்பால் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவருக்கு மருத்துவர்கள் தானமாகப் பெறப்பட்ட இதயத்தை வெற்றிகரமாகப் பொருத்தினர்.
மூளைச்சாவு அடைந்தவரின் நுரையீரல், கல்லீரல், கணையம், சிறுநீரகம் உள்ளிட்ட மற்ற உடல் உறுப்புகள் தேவைப்பட்ட பலருக்குப் பொருத்தப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

