மின்னிலக்க இந்தித் திணிப்பு: வானிலை ஆய்வு மைய இணையத்தளம் முழுவதும் இந்தி

மின்னிலக்க இந்தித் திணிப்பு: வானிலை ஆய்வு மைய இணையத்தளம் முழுவதும் இந்தி

2 mins read
dbbc2b4b-5dd0-4a9a-a4df-8a9a36bf5792
இந்திய வானிலை ஆய்வு மைய இணையத்தளத்தின் முகப்புப் பக்கம். - கோப்புப் படம்: மாலை மலர்
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரபூர்வ இணையத்தளம் முழுவதும் இந்தி மொழிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

மத்திய அரசு இம்முறை மின்னிலக்க இந்தித் திணிப்பில் ஈடுபட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

வானிலை மைய இணையத்தளத்தில் ஆங்கிலம் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டதால் தென் மாநில மக்களுக்கு அம்மையம் வழங்கும் தகவல்கள், செய்திகளைத் தெரிந்துகொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

மேலும், இந்தி மொழி தெரியாத, ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்தும் பயனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பதுடன், மொழிச் சமத்துவம் மீதான கேள்விகளும் எழுந்துள்ளன.

இந்தியாவின் வானிலை ஆய்வு மையம், நாள்தோறும் வானிலை மாற்றங்கள், புயல், கனமழை, வெப்ப அலை, பனிப்பொழிவு குறித்த முன்னெச்சரிக்கைகளை வழங்கி வருகிறது.

சென்னை, மும்பை, கோல்கத்தா, நாக்பூர், கௌஹாத்தி, புதுடெல்லி ஆகிய ஆறு இடங்களில் மண்டல வானிலை ஆய்வு மையங்கள் உள்ளன.

சென்னையில் இயங்கிவரும் மண்டல மையம் தென்மாநிலங்களில் நிகழும் வானிலை மாற்றங்களைக் கண்காணிக்கும் பணியை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், புதுடெல்லியில் இயங்கிவரும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமையகம் தனது அதிகாரபூர்வ இணையத்தளத்தை முழுக்க இந்தி மொழியில் மாற்றி அமைத்துள்ளது. அத்தளத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து தகவல்களும் இந்தி மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதுவரை இந்த இணையத்தளத்தின் முதன்மை மொழியாக இருந்து வந்தது. தற்போது இணையத்தளத்திற்குள் நுழைந்து சென்ற பிறகு, ஆங்கில மொழியில் மாற்றிக்கொள்ளும்படி தகவல் குறிப்பு காணப்படுகிறது.

“இதையே மின்னிலக்க இந்தித் திணிப்பு என்கிறோம். முன்புபோல் ஆங்கிலம் முதன்மை மொழியாக இருக்க வேண்டும்,” எனப் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்