டெல்லி அரசின் அதிரடி உத்தரவு: அதிர்ச்சியில் அசைவ பிரியர்கள்

2 mins read
3bee5203-b392-4891-9eea-170a97096314
 தந்தூரி தயாரிக்கப் பயன்படும் அடுப்பு. - படம்: தந்தூர் மாஸ்டர்

புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், தந்தூரி தயாரிக்கப் பயன்படும் அடுப்புகளைப் பயன்படுத்தத் தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

டெல்லி நகரில் கடுமையாகி வரும் காற்று மாசுபாடு (AQI) காரணமாக, மாநில அரசு முக்கியமான அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, டெல்லி முழுவதும் உள்ள உணவகங்கள், ஹோட்டல்கள், தாபாக்கள், தெருவோர உணவகங்களில் நிலக்கரி, விறகுகளைப் பயன்படுத்தும் தந்தூரி அடுப்புகளுக்கு முற்றிலும் தடை விதித்துள்ளது. மேலும், திறந்த வெளியில் எவ்விதமான எரிக்கும் செயல்களைச் செய்யக்கூடாது எனவும் டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் இயங்கும் அனைத்து வகை உணவகங்களும் நிலக்கரி அல்லது விறகுகளுக்குப் பதிலாக, மின்சாரம் அல்லது எரிவாயு அடிப்படையிலான தந்தூரி அடுப்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறும் உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த உத்தரவை மீறும் நபர்கள் அல்லது நிறுவனங்கள் மீது ரூ.5,000 வரை அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகங்களுக்கும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, டெல்லி முதல்வர் ரேகா குப்தா, நகரம் முழுவதும் திறந்தவெளி எரிப்பு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். “திறந்த வெளியில் குப்பை உள்ளிட்டவற்றை எரிக்க வேண்டாம். உங்கள் சிறிய ஒத்துழைப்பு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்,” என அவர் சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் பொதுமக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நடவடிக்கைகள், நகரில் உள்ள உள்ளூர் மாசு மூலங்களைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் எடுக்கப்பட்டவை என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமான நிலையில் தொடர்வதால், சுவாசக் கோளாறுகள், கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

மாநகராட்சி, பிற உள்ளாட்சி அமைப்புகள், உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டு, நிலக்கரி அல்லது விறகுகள் பயன்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகள் அனைத்து வகை உணவகங்களுக்கும் ஒரே மாதிரியாகப் பொருந்தும் என்றும், விதிமுறைகளை மீறும் இடங்களில் அபராதம் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் தவிர்க்க முடியாது என்றும் டெல்லி மாசு கட்டுப்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவு சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளுக்கும் விரைவு அஞ்சல், மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டு, உடனடி அமலுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்