ராணுவச் செலவுகள்: உலக அளவில் ஐந்தாவது இடத்தில் இந்தியா

ராணுவச் செலவுகள்: உலக அளவில் ஐந்தாவது இடத்தில் இந்தியா

2 mins read
a4b3a15c-8771-46ad-9341-91618047291c
2024ஆம் ஆண்டிலும் இந்தியா, ராணுவத்திற்கு அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருந்தது. - படம்: பிக்சாபே
Google News Preferred Icon

புதுடெல்லி: உலக அளவில் ராணுவத் தளவாடங்களுக்கு அதிகச் செலவு செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

சுவீடன் நாட்டைச் சேர்ந்த ‘ஸ்டாக்ஹோம் அனைத்துலக அமைதி ஆய்வுக் கழகம்’ (SIPRI) வெளியிட்டுள்ள அண்மைய தரவுகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.

2025ஆம் ஆண்டில் இந்தியா தனது ராணுவத் தேவைக்காக 92.1 பில்லியன் அமெரிக்க டாலர் செலவிட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 8.9 விழுக்காடு அதிகம்.

‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை, எல்லைப் பகுதிகளில் நிலவும் பதற்றமான சூழல் போன்றவை காரணமாக ராணுவத் தயார்நிலையை உறுதிப்படுத்த இந்தியா தனது பாதுகாப்புச் செலவுகளைக் கணிசமாக உயர்த்தியுள்ளது. உலகளாவிய ராணுவச் செலவினங்களில் இந்தியாவின் பங்கு 3.2 விழுக்காடாக உள்ளது.

அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜெர்மனி ஆகியவை 2025ல் இந்தியாவைவிட அதிகமாக ராணுவச் செலவுகளைச் செய்துள்ளன.

சீனா 336 பில்லியன் டாலர் செலவிட்டு உலக அளவில் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் தனது ராணுவச் செலவை 11 விழுக்காடு அதிகரித்தது. சென்ற ஆண்டு அது 11.9 பில்லியன் டாலர் செலவிட்டது. ஆக அதிக ராணுவச் செலவுகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் தற்போது 31வது இடத்தில் உள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை, ஆயுத இறக்குமதியில் ரஷ்யாவைச் சார்ந்திருக்கும் போக்கு படிப்படியாகக் குறைந்து வருகிறது. அதற்குப் பதிலாக பிரான்ஸ், இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகளிடமிருந்து தளவாடங்களை வாங்குவதில் இந்தியா அதிக ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

உலகின் ஒட்டுமொத்த ராணுவச் செலவினம் 2025ஆம் ஆண்டில் 2,887 பில்லியன் டாலராகப் பதிவானது. இது அதற்கு முந்திய ஆண்டைவிட 2.9 விழுக்காடு அதிகம். குறிப்பாக, உக்ரேன் - ரஷ்யா போர் எதிரொலியால் ஐரோப்பிய நாடுகள் தங்கள் ராணுவச் செலவுகளை வெகுவாக உயர்த்தியுள்ளன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்