காற்றில் ஆடும் பிரம்மாண்ட மெஸ்ஸி சிலையை அகற்ற முடிவு

காற்றில் ஆடும் பிரம்மாண்ட மெஸ்ஸி சிலையை அகற்ற முடிவு

1 mins read
6b1eaf96-ef03-493b-9dcf-bd2e3f1488a4
லயனல் மெஸ்ஸியின் பிரம்மாண்டச் சிலையைப் பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்காகப் புதன்கிழமையன்று (மே 27) அதைக் கயிற்றால் கட்டும் பணிகள் நடைபெற்றன. - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

கோல்கத்தா: உலகெங்கும் புகழ்பெற்ற அர்ஜென்டினா காற்பந்து நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி 2025ஆம் ஆண்டு இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டார்.

அதன் நினைவாக அவரது பிரம்மாண்டச் சிலை கோல்கத்தாவில் நிறுவப்பட்டது. தற்போது, அச்சிலை காற்றில் ஆடிக்கொண்டிருப்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக அது அகற்றப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய சிலை காற்றில் எவ்வாறு ஆட்டம் காணும் என்பது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளிக்கவில்லை.

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கோல்கத்தாவில் கடந்த டிசம்பர் மாதம் மெஸ்ஸியின் இந்தியப் பயணத்தின்போது இந்த 21 மீட்டர் உயர தங்க நிறச் சிலை திறந்துவைக்கப்பட்டது.

மெஸ்ஸி உலகக் கிண்ணத்தை உயர்த்திப் பிடிப்பதுபோல சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது.

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த முக்கியமான சாலை ஒன்றின் அருகில் அமைந்துள்ள இந்தச் சிலை தற்போது காற்றில் ஆடுவது கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மேற்கு வங்க அரசுப் பொறியாளர்கள் இச்சிலையைப் பரிசோதித்து இது பாதுகாப்பற்றது என எச்சரித்துள்ளனர்.

இதனையடுத்து, சிலையைப் பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்காகப் புதன்கிழமையன்று (மே 27) அதைக் கயிற்றால் கட்டும் பணிகள் நடைபெற்றன.

சிலை எப்போது முழுமையாகக் கீழே இறக்கப்படும் என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும் சிலை அகற்றும் பணிக்குத் தலையாய முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் திரு சரத்வத் முகர்ஜி தெரிவித்துள்ளார். இந்தச் சிலை பழுதுபார்க்கப்பட்டு வேறோர் இடத்தில் மீண்டும் நிறுவப்படுமா என்பது குறித்து அதிகாரிகள் இன்னும் தெளிவுபடுத்தவில்லை.

குறிப்புச் சொற்கள்