குப்பை மேடு சரிந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆனது

குப்பை மேடு சரிந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆனது

2 mins read
594d817c-3197-476a-a7fd-ee5ff1e03c15
பல்லாயிரம் டன் எடையுள்ள குப்பை மேடு சரிந்ததில் அதனுள் சிக்கிய 23 பேரில் 14 பேர் மீட்கப்பட்டனர். - படம்: என்டிடிவி
multi-img1 of 2
Google News Preferred Icon

புதுடெல்லி: மகாராஷ்டிர மாநிலத்தில் கழிவுப்பொருள் மறுசுழற்சி ஆலையில் மலைபோல் குவிந்திருந்த குப்பை மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.

புனே மாவட்டத்தில் பிம்ப்ரி சிஞ்ச்வாட் மாநகராட்சிக்கு உட்பட்ட மோஷி என்னும் பகுதியில் உள்ள கழிவுப்பொருள் மறுசுழற்சி நிலையத்திற்குச் சொந்தமான அந்தக் குப்பைமேடு கனத்த மழை காரணமாக கடந்த புதன்கிழமை திடீரென்று இடிந்து விழுந்ததாக அதனை நடத்தும் நகரமன்றம் திங்கட்கிழமை (ஜூலை 13) தெரிவித்தது.

இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழைக் காலத்தில் கட்டட விபத்துகளும் கட்டுமான விபத்துகளும் அதிகமாக நடப்பதுண்டு.

அந்த வகையில், கடந்த வாரம் பெய்த மழை காரணமாக கழிவுப்பொருள் மறுசுழற்சி நிலையக் குப்பை மேடு சரிந்து விபத்து ஏற்பட்டது. பல்லாயிரம் டன் எடையுள்ள குப்பைக் குவியல் சரிந்ததில் அதன் அடியில் 23 பேர் சிக்கிக்கொண்டனர்.

தேசியப் பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

மீட்புப் பணிகள் இரவு, பகலாக நடைபெற்று வந்த நிலையில், ஒருவர், இருவர் என 14 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். எஞ்சிய ஒன்பது பேரின் கதி என்னவென்று மர்மமாக இருந்தது.

விபத்து நடந்ததற்கு மறுநாள் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை அந்த எண்ணிக்கை எட்டாக அதிகரித்தது. மறுநாள் கடைசி நபரும் மாண்ட நிலையில் மீட்கப்பட்டார்.

உயிருடனோ சடலமாகவோ அனைவரும் மீட்கப்பட்ட நிலையில், விபத்து தொடர்பான விசாரணையை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். விசாரணை முடியும் வரை ஆலையின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்