150 முறை கைப்பேசியில் அழைத்தும் பேசவில்லை; 230 கி.மீ. பயணம் செய்து மனைவியைக் கொன்ற காவலர்

150 முறை கைப்பேசியில் அழைத்தும் பேசவில்லை; 230 கி.மீ. பயணம் செய்து மனைவியைக் கொன்ற காவலர்

2 mins read
399db3c6-0616-40ae-ad28-3eb154a06d26
கொலையான பிரதீபாவும் அவரைக் கொலை செய்த கிஷோரும். - படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

பெங்களூரு: மகப்பேற்றுக்காகத் தாய்வீடு சென்றிருந்த தன் மனைவியை 150 முறை கைப்பேசியில் அழைத்தும் பேசாததால் ஆத்திரமடைந்த காவலர், 230 கிலோமீட்டர் பயணம் செய்து, அவரைக் கழுத்தை நெரித்துக் கொன்றார்.

இச்சம்பவம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் திங்கட்கிழமை நிகழ்ந்தது.

கிஷோர், 32, என்ற அந்த ஆடவர் சாமராஜநகர் கிழக்குக் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்.

அவருடைய மனைவி பிரதீபா, 24, மகப்பேற்றுக்காக களத்தூர் என்றும் சிற்றூரிலுள்ள தமது பிறந்த வீட்டிற்குச் சென்றிருந்தார். 11 நாள்களுக்கு முன்னர்தான் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

பிரதீபாவின் நடத்தையில் கிஷோர் சந்தேகம் கொண்டார்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கிஷோர் கைப்பேசி வழியாக பிரதீபாவைத் திட்டினார். தன் மகள் அழுதபடியே பேசியதைக் கண்ட பிரதீபாவின் தாய், உடனே கைப்பேசியைப் பிடுங்கி, அழைப்பைத் துண்டித்தார்.

அத்துடன், தாய் அழுதுகொண்டே இருந்தால் பிள்ளையின் உடல்நிலை பாதிக்கப்பட்டுவிடும் என்றும் அதனால் இனி கிஷோர் அழைத்தால் கைப்பேசியை எடுத்துப் பேச வேண்டும் என்றும் தன் மகளிடம் அவர் அறிவுறுத்தினார்.

மறுநாள் திங்கட்கிழமை காலை கைப்பேசியை எடுத்துப் பார்த்த பிரதீபா, தன் கணவர் 150 முறை அழைத்திருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதுபற்றித் தன் பெற்றோரிடமும் அவர் கூறினார்.

முற்பகல் 11.30 மணியளவில் அங்கு சென்றார் கிஷோர். மருமகன் வந்ததும் மாமியார் மொட்டை மாடிக்குச் சென்றுவிட்டார். முதல் மாடியில் பிரதீபாவும் பிள்ளையும் இருந்தனர்.

முதலில் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்த கிஷோர், பின்னர் தன் மனைவியின் அறைக்குள் சென்று, கதவை உட்பக்கமாகத் தாழிட்டார். பின்னர் துப்பட்டாவால் பிரதீபாவின் கழுத்தை இறுக்கிக் கொன்றார்.

ஏதோ அபாயத்தை உணர்ந்த பிரதீபாவின் தாய், உடனே விரைந்து கதவைத் தட்டினார். ஆனால், 15 நிமிடங்கள் கழித்தே கதவைத் திறந்த கிஷோர், தன் மனைவியைக் கொன்றுவிட்டதாகக் கூறினார். பின் அங்கிருந்து தப்பியோடினார்.

அதன்பிறகு சிகிச்சைக்காக கோலாரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அவர் சென்றார். அவரது இருப்பிடத்தைக் கண்டுபிடித்த காவல்துறை, பின்னர் அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்றியது. சிகிச்சை முடிந்ததும் அவர் கைதுசெய்யப்படுவார் என்று காவல்துறை தெரிவித்தது.

தன் மகளைக் கொந்ற கிஷோருக்குக் கடும் தண்டனை விதிக்க வேண்டும் என்று பிரதீபாவின் தந்தை வலியுறுத்தியுள்ளார். கிஷோர்மீது கொலை வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
கொலைகாவலர்