புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாநாட்டின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 20) காங்கிரஸ் தொண்டர்கள் மேலாடையைக் களைந்து போராட்டம் நடத்தினர்.
கடந்த 16ஆம் தேதி மாநாடு தொடங்கியது. அந்த மாநாடு ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்த சூழலில் வெள்ளிக்கிழமை இளைஞர் காங்கிரசைச் சேர்ந்த சிலர் அரங்கம் ஐந்தில் திடீரென நுழைந்தனர். அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் படங்கள் அச்சிடப்பட்ட மேலாடைகளை அணிந்திருந்தனர்.
அந்த ஆடையில் இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம், எப்ஸ்டீன் கோப்புகள் உள்ளிட்ட வாசகங்கள் இருந்தன.
சில நிமிடங்களில் அவர்கள் ஆடையைக் களைந்து பிரதமர் மோடிக்கு எதிராகவும் இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிராகவும் முழக்கமிட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
போராட்டத்தை முன்னின்று நடத்திய ஐந்து பேரிடம் மட்டும் விசாரணை நடைபெற்று வருகிறது.
‘‘மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்துக்குள் நுழைய ‘கியூஆர்’ குறியீடு கொண்ட அனுமதி தேவை. காங்கிரஸ் தொண்டர்கள் எவ்வாறு பாரத் மண்டபத்துக்குள் நுழைந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது,’’ என்று டெல்லி காவல்துறையினர் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
பாஜக கண்டனம்
இந்நிலையில், காங்கிரஸ் தொண்டர்களின் நடவடிக்கைக்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
“இந்தியாவின் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் தொண்டர்கள் ஏஐ மாநாட்டில் போராட்டம் நடத்தி உள்ளனர். அவர்களது நடவடிக்கையை இந்தியா மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் பார்த்தது,’’ என்று தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
அதேபோல் மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, சிவராஜ் சிங் சௌகான் ஆகியோரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலாடை இன்றிப் போராட்டம் நடத்திய காங்கிரஸ் தொண்டர்களைப் பொதுமக்கள் சிலர் அடித்து விரட்டிய காணொளிகளும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

