ஸ்ரீநகர்: இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாகப் பொதுமக்களைக் கடுமையான குளிர் வாட்டி வருகிறது.
இதனால் பலர் அதிகம் வெளியே போகாமல் இருக்கின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு வரும் பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி வரை குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆகக் கடுமையான குளிரை காஷ்மீர் எதிர்நோக்கி வருகிறது.
குறிப்பாக, தலைநகர் ஸ்ரீநகரில் கடந்த ஒரு வாரமாக வெப்பநிலை பூஜ்ஜியம் டிகிரிக்குக் குறைவாகச் சென்றுள்ளது. இதுவரை இல்லாத வகையில் வெப்பநிலை அங்கு உறைபனிக்குக் கீழே சரிந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 30) ஸ்ரீநகரில் வெப்பநிலை பூஜ்ஜியத்துக்கு 4.5 டிகிரி செல்சியஸ் குறைவாகப் பதிவானது. காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கடுமையான பனிப்பொழிவு காரணமாகப் பல இடங்கள் வெண்பனியால் மூடப்பட்டுள்ளன. பல இடங்களில் செடிகள், மரங்களின் இலைகள் கண்ணாடி இழைகள் போல் உறைந்து காணப்படுகின்றன.
காஷ்மீரின் பெரும்பாலான இடங்களில் இரவில் வெப்பநிலை குறைந்ததால் அங்கு குளிர்காலம் தீவிரமடைந்துள்ளது.

