பட்டு வேட்டி, சட்டையில் தலைமைச் செயலகம் வந்த முதல்வர் விஜய்

பட்டு வேட்டி, சட்டையில் தலைமைச் செயலகம் வந்த முதல்வர் விஜய்

2 mins read
23d9b059-10da-4111-a58e-91924dab6c90
கோட் சூட் அணிந்துவரும் விஜய் திடீரெனப் பட்டு வேட்டி, சட்டைக்கு மாறியிருக்கிறார். - படம்: தினமணி

சென்னை: தமிழ்நாட்டின் முதல்வர் விஜய், நாள்தோறும் தலைமைச் செயலகத்துக்கு கோட்- சூட் அணிந்து காலை 9 மணிக்கு வந்து பணிகளை முடித்த பிறகு மாலை இல்லம் திரும்புகிறார்.

2026ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கித் தமிழகம், இந்தியா மட்டுமின்றி உலகமே காத்திருந்தது. இதற்குக் காரணம் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்.

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

அரசியல் வரலாற்றிலேயே எந்த முதலமைச்சரும் இதுவரை அணிந்திராத கோட்-சூட் அணிந்து முதலமைச்சராக விஜய் பதவியேற்றார்.

இதனைத் தொடர்ந்து அவர் நாள்தோறும் தலைமைச் செயலகத்துக்கு கோட்- சூட் அணிந்து வருகிறார்.

முதலமைச்சர் விஜய்யின் ஒவ்வொரு செயல்பாடும் அரசியல் விமர்சகர்களால் உற்றுநோக்கப்படுகிறது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அன்று (மே 29) பட்டு வேட்டி-சட்டையில் முதலமைச்சர் விஜய் தலைமைச் செயலகத்திற்கு வந்து பணிகளை மேற்கொண்டுள்ளார்.

தமது முகாம் அலுவலகத்திற்கு அருகில் நடைபெற்ற புதுமனை புகு விழாவில் கலந்து கொண்ட பிறகு தலைமைச் செயலகம் வந்துள்ளார் முதலமைச்சர்.

முதலமைச்சர் விஜய், பட்டு வேட்டி-சட்டையில் தலைமைச் செயலகத்திற்கு வந்த வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றன.

இதற்கிடையே அவர் விரைவில் மீண்டும் டெல்லி செல்வார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு முதல்வர் விஜய் புதன்கிழமை டெல்லி சென்று வந்தார். அங்கு பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து, தமிழக நலன் குறித்து கோரிக்கைகளை முன்வைத்தார்.

இந்தப் பயணத்தின்போது தங்களது கூட்டணி கட்சியான காங்கிரசின் மூத்த தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசுவார் என்று கூறப்பட்டது.

ஆனால், அவர் இந்தச் சந்திப்பை மேற்கொள்ளாமலே மீண்டும் சென்னை திரும்பினார்.

இந்த நிலையில், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் விஜய் ஜூன் 11ஆம் தேதி மீண்டும் டெல்லி செல்ல இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வரின் இந்தப் பயணத்தின்போது அவர் காங்கிரஸ் தலைவர்களைச் சந்திக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
விஜய்தமிழ்நாடுபட்டுக்கோட்டைபட்டு