சவாலான கட்டத்தில் ஏர் இந்தியா: டாடா தலைவர்

சவாலான கட்டத்தில் ஏர் இந்தியா: டாடா தலைவர்

2 mins read
284e3a14-7f4d-4a82-b474-9ed430948546
மோசமான நிலையில் இருந்து மீண்டுவருவதற்கான யோசனைகள் ஏர் இந்தியா ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன. - படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா
Google News Preferred Icon

புதுடெல்லி: ஏர் இந்தியா விமான நிறுவனம் சவாலான கட்டத்தில் இருப்பதாக அதனை நிர்வகிக்கும் டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் நடராஜன் சந்திரசேகரன் கூறியுள்ளார்.

வரலாறு காணாத இழப்புகளைச் சரிக்கட்டவும் செயல்பாடுகளில் ஏற்பட்ட கோளாறுகளைச் சரிசெய்யவும் ஏர் இந்தியா போராடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநர் பதவிகளில் இருந்து கேம்பெல் வில்சன் கடந்த வாரம் விலகிய நிலையில் சந்திரசேகரனின் கருத்து வெளியாகி உள்ளது.

குருகிராம் நகரில் உள்ள ஏர் இந்தியா குழுமத்தின் தலைமையகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) நடைபெற்ற ஊழியர் சந்திப்பில் அவர் பேசினார்.

அப்போது, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்களின் முக்கியமான தலைமை அதிகாரிகளையும் அவர் சந்தித்துப் பேசினார்.

“பெரும் சிக்கல்களைச் சமாளிப்பதில் ஏர் இந்தியா பணியாளர்கள் மிகுந்த மனவுறுதியை வெளிப்படுத்தி உள்ளனர். அதே உணர்வுடன் நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.

“நமது எதிர்காலம் பிரகாசமாக தென்பட்டாலும், நமது லட்சியத்திற்கான உறுதியான அடித்தளத்தை நாம் அமைத்திருந்தாலும் தற்போது நாம் ஒரு சவாலான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறோம்; இதன் தாக்கம் விமானத் துறையில் மிகவும் தெளிவாகத் தெரிகிறது,” என்று அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

மேலும், மோசமான நிலையில் இருந்து மீண்டு வர, ஊழியர்களுக்கு மூன்று முக்கிய அறிவுரைகளை சந்திரசேகரன் வழங்கினார்.

“முதலில், தலைமைப் பொறுப்பில் இருக்கும் மூத்த அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை ஒவ்வொருவரும் நிறுவனத்தின் செலவுகளைக் கட்டுப்படுத்துவதில் தீவிரக் கவனம் செலுத்த வேண்டும்.

“இரண்டாவதாக, பயணிகளுக்கு வழங்கும் சேவையின் தரத்தை தொடர்ந்து மேம்படுத்த வேண்டும்.

“கடைசியாக, நிறுவனத்தின் உண்மையான சூழலைப் புரிந்துகொண்டு, யதார்த்த நிலையில் செயல்பட வேண்டும்,” என்றார் அவர்.

ஏர் இந்தியா தற்போது எதிர்கொள்ளும் இழப்பு மற்றும் செயல்பாட்டுக் குறைபாடுகளுக்குத் தீர்வுகாணும் வகையில் அவர் இந்த ஆலோசனைகளை வழங்கியதாகத் தெரிகிறது.

ஏர் இந்தியா நிறுவனத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 25.1 விழுக்காட்டுப் பங்குகளை வைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
ஏர் இந்தியாவிமானப் போக்குவரத்துசவால்

தொடர்புடைய செய்திகள்