சென்னை: மாலத்தீவில் நடைபெற்ற 7வது கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கட்கிழமை (டிசம்பர் 15) சென்னை தலைமைச் செயலகத்தில் ரூ.1.90 கோடி ஊக்கத்தொகை வழங்கிப் பாராட்டினார்.
மாலத் தீவில் டிசம்பர் 2 முதல் 6 வரை நடைபெற்ற 7வது கேரம் உலகக் கோப்பைப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கீர்த்தனா, காசிமா, மித்ரா ஆகியோர் பதக்கங்கள் வென்றனர்.
மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்த கீர்த்தனாவுக்கு ஒரு கோடி ரூபாயும் ஒரு வெண்கலம், ஒரு வெள்ளி, ஒரு தங்கம் வென்ற காசிமாவுக்கு 50 லட்சம் ரூபாயும் மித்ராவுக்கு 40 லட்சம் ரூபாயும் காசோலைகளாக முதல்வர் ஸ்டாலின் வழங்கி, வீராங்கனைகள் இன்னும் பல வெற்றிகளைப் பெற்று, நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் வாழ்த்தினார்.
நாட்டிலேயே விளையாட்டு துறையில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும் அகில இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கு பெற்று வெற்றி பெறும் வகையில் உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

