எதிர்க்கட்சிகள் அமளி: இரு அவைகளும் டிசம்பர் 2 வரை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகள் அமளி: இரு அவைகளும் டிசம்பர் 2 வரை ஒத்திவைப்பு

2 mins read
879b466a-911a-4dd9-a234-5051d0d94c1d
எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் டிசம்பர் 2ஆம் தேதி இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியாவில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இம்மாதம் 25ஆம் தேதி தொடங்கியது.

அப்போது, அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை, உத்தரப்பிரதேசத்தின் சம்பாவில் அண்மையில் நடந்த வன்முறை ஆகியவை குறித்து விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் முடங்கின.

மேலும், கடந்த மூன்று நாள்களாக எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 29) காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடின.

அப்போது அதானி விவகாரம், வக்ஃபு வாரியச் சட்டத் திருத்தம், மணிப்பூர் வன்முறை உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதாக தினத்தந்தி தகவல் தெரிவித்தது.

இதையடுத்து மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் அறிவித்தார்.

அதன்படி மாநிலங்களவை டிசம்பர் 2ஆம் தேதி காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேபோல, மக்களவையிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவை நண்பகல் 12 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போது எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. இதனால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து தொடர்ந்து 4வது நாளாக இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்