வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதலை ஏற்கமுடியாது: ஐ.நா.வில் இந்தியா கண்டனம்

வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதலை ஏற்கமுடியாது: ஐ.நா.வில் இந்தியா கண்டனம்

2 mins read
b876fa0e-04c7-4c37-b596-cf18d9f68622
ஏறக்குறைய 20,000 டன் சமையல் எரிவாயுடன் குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள காண்ட்லா துறைமுகத்தைச் சென்றடைந்த ‘சிமி’ சரக்குக் கப்பல். - படம்: டிரிபியூன்இந்தியா/ பிடிஐ

நியூயார்க்/புதுடெல்லி: ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அனைத்துலக வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் எவ்வகையிலும் ஏற்கத்தக்கதல்ல என்று ஐக்கிய நாடுகள் (ஐநா) சபையில் இந்தியா கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் நடைபெற்ற ஐநா பொருளியல், சமூக மன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்ற ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி பர்வதனேனி ஹரீஷ் இந்தியாவின் கருத்துகளை முன்வைத்தார்.

மேற்காசியப் பகுதியில் நிலவிவரும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய எரிசக்தி, உரத் தட்டுப்பாடு பிரச்சினை தீவிரமடைந்துள்ளது. இப்பிரச்சினைக்குத் தீா்வுகாண அனைத்துலக ஒத்துழைப்புடன் கூடிய குறுகியகால, அமைப்பு ரீதியிலான நடவடிக்கைகள் அவசரமாக எடுக்கப்பட வேண்டும் என்று அவர் தமது எக்ஸ்’ சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

“மிக முக்கிய கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்துக்கு முட்டுக்கட்டை போடுவதை ஏற்க முடியாது. இதுதொடா்பான அனைத்துலகக் கடல்சார் சட்டங்கள் அனைத்தும் முழுமையாக மதிக்கப்பட வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியா சென்றடைந்தது மேலும் ஒரு எல்பிஜி கப்பல்

இந்நிலையில், மார்சல் தீவுகளில் பதிவு செய்யப்பட்ட ‘எம்வி சிமி’ என்ற கப்பல் கத்தாரில் இருந்து 20,000 மெட்ரிக் டன் எல்பிஜி எரிவாயுவை ஏற்றிக்கொண்டு, குஜராத் மாநிலம் காண்ட்லாவில் உள்ள தீனதயாள் துறைமுகத்தை ஞாயிற்றுக்கிழமை காலை சென்றடைந்தது.

இக்கப்பல் கடந்த 13ஆம் தேதி ஹோர்முஸ் நீரிணையைக் கடந்தது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்புக் காரணங்களால் நடுக்கடலில் பல நாடுகளின் கச்சா எண்ணெய், எரிவாயுக் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளபோதிலும் இந்தியா, சீனா உள்ளிட்ட தனது நட்பு நாடுகளின் கப்பல்களை மட்டும் ஈரான் தொடர்ந்து அனுமதித்து வருகிறது.

மங்களூரு செல்லும் ‘என்.வி. சன்ஷைன்’

இதற்கிடையே, 46,392 டன் சமையல் எரிவாயுவுடன் சென்றுகொண்டிருக்கும் வியட்னாம் நாட்டின் கொடியைக் கொண்ட ‘என்.வி. சன்ஷைன்’ என்ற மற்றொரு கப்பல், கர்நாடக மாநிலம், புது மங்களூரு துறைமுகத்தை திங்கட்கிழமை (மே 18) சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் தடையற்ற எரிசக்தித் தேவையை உறுதிசெய்யும் வகையில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் மொத்தம் 15 கப்பல்கள் அந்த நீரிணையைக் கடந்து இந்தியாவுக்குச் சென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்