நாசிக்: நாசிக்கில் உள்ள புகழ்பெற்ற டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர், தனது சக ஊழியர்கள் ஐவர்மீது நாசிக் காவல்நிலையத்தில் அளித்துள்ள பாலியல் புகார் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பான தகவல்களை ‘இந்தியா டுடே டிவி’ உறுதிப்படுத்தியுள்ளது.
ஜூன் 2025 முதல் மார்ச் 2026 வரையிலான காலகட்டத்தில் அவர்களது அத்துமீறல்கள் நடந்ததாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள வாக்குமூலத்தின்படி, தான் நிறுவனத்தில் பணியில் சேர்ந்த சில நாள்களிலேயே துன்புறுத்தல்கள் தொடங்கியதாகவும் ஷாருக் குரேஷி, ரசா மேமன், ஆசிப் அன்சாரி, தௌசிப் அத்தார், ஷபி ஷேக் ஆகிய ஐந்து பேரும் தன்னைத் தொடர்ந்து துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
ரசா மேமன், ஆசிப் அன்சாரி ஆகியோர் அந்தப் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
அலுவலகத்தில் வைத்து அந்தப் பெண்ணைக் கட்டியணைத்து தொந்தரவு செய்வது, தொடையில் கையை வைப்பது, சேலையைப் பிடித்து இழுப்பது போன்ற அத்துமீறும் செயல்களில் ஈடுபட்டதாகப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகளிர் ஆணையம் நடவடிக்கை
வேலை போய்விடும் என்ற பயத்தில் இத்தனை நாள்களாகப் பொறுத்துக் கொண்டதாகவும், இனியும் தாங்க முடியாது என்ற நிலையில் புகார் அளித்ததாகவும் அந்தப் பெண் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், தேசிய மகளிர் ஆணையம் இதுகுறித்து விசாரிக்கத் தனிக்குழுவை அமைத்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள டிசிஎஸ் நிறுவனம், குற்றம்சாட்டப்பட்ட ஐந்து ஊழியர்களையும் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

