தனித்துப் போட்டி: கெஜ்ரிவால் அறிவிப்பு

தனித்துப் போட்டி: கெஜ்ரிவால் அறிவிப்பு

2 mins read
9fc18ca7-7606-4674-9964-939c4e555dc5
அரவிந்த் கெஜ்ரிவால். - கோப்புப் படம்: இந்திய ஊடகம்
multi-img1 of 2
Google News Preferred Icon

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி கடந்த முறையைப்போலவே தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார்.

டெல்லி சட்டப் பேரவைத் தேர்தல் இதற்கு முன்னர் 2020ஆம் ஆண்டு நடைபெற்றபோது மொத்தம் உள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது.

பாஜக 8 தொகுதிகளில் வென்ற நிலையில், காங்கிரஸ் கட்சி ஓர் இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.

இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் 2025 பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது.

பாஜகவுக்கு எதிராகக் களத்தில் நிற்கும் ஆம் ஆத்மி கட்சி, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கக் கடுமையாக உழைத்து வருகிறது.

இதற்கிடையே, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையில் கூட்டணிக்கான இறுதிக்கட்ட ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் பரவியது.

காங்கிரசுக்கு 15 இடங்களும் இண்டியா கூட்டணியின் பிற கட்சிகளுக்கு 1-2 இடங்களும் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்கள் ஆம் ஆத்மி கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.

ஆனால், அந்தத் தகவல்களை அரவிந்த் கெஜ்ரிவால் மறுத்துள்ளார்.

“வரவிருக்கும் டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனது சொந்த பலத்தில் போட்டியிடும். காங்கிரசுடன் கூட்டணி அமைய வாய்ப்பில்லை,” என்று அவர் தமது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, டெல்லி சீலாம்பூர் தொகுதி ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ அப்துல் ரகுமான் அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இந்நிலையில்தான் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று கெஜ்ரிவால் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்