ஏர்பஸ் ஏ320 மீட்பு: இண்டிகோ, ஏர் இந்தியா விமானங்கள் ரத்து, தாமதம் ஏற்பட வாய்ப்பு

ஏர்பஸ் ஏ320 மீட்பு: இண்டிகோ, ஏர் இந்தியா விமானங்கள் ரத்து, தாமதம் ஏற்பட வாய்ப்பு

2 mins read
da2732af-43da-467c-b460-873c7fc3ead2
உலகளவில் கிட்டத்தட்ட 6,000 விமானங்கள் பாதிப்பு. - படம்: புளும்பெர்க்
Google News Preferred Icon

புதுடெல்லி: ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ ஆகிய நிறுவனங்களின் விமானச் சேவைகள் இவ்வாரயிறுதியில் சில பாதிப்புகளைச் சந்திக்கக்கூடும்.

ஐரோப்பிய விமானத் தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ்சின் ஏ320 ரக விமானங்களின் குறிப்பிட்ட சிலவற்றில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதை அந்நிறுவனம் கண்டறிந்தது.

இதனைத் தொடர்ந்து, பராமரிப்புப் பணிகளை முன்னெடுக்க உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளதையடுத்து, விமான நிறுவனங்கள் நடவடிக்கைகள் எடுக்கத் தொடங்கியுள்ளன.

இதனால், இந்த வாரயிறுதியில் சில விமானச் சேவைகளில் தாமதம் ஏற்படலாம் என்றும் ரத்துசெய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவில் கிட்டத்தட்ட 250 விமானங்கள் மென்பொருள் மேம்பாட்டுக்காகவும் தொழில்நுட்பக் கருவிகளை மாற்றுவதற்காகவும் கட்டாயத் தரையிறக்கத்தைச் சந்திக்கலாம் என முதற்கட்ட அறிக்கை தெரிவித்திருப்பதாக ‘த டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழ் செய்தி வெளியிட்டது.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 350க்கும் மேற்பட்ட ஏ320 ரக விமானங்கள் சேவையிலிருந்து தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் அது கூறியது.

உலகளவில் விமானப் பயணங்களில் இப்பிரச்சினையால் பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 6,000 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

சில ஏ320 ரக விமானங்களின் கட்டுப்பாட்டு அமைப்பால் பயன்படுத்தப்படும் தரவுகளைத் தீவிர சூரிய கதிர்வீச்சு சிதைக்கக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக ஏர்பஸ் நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

“நாங்கள் ஏர்பஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். தேவையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் அதே வேளையில், இடையூறுகளைக் குறைக்க நாங்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்,” என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதை உறுதிப்படுத்திய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், “குறிப்பிட்ட சில விமானச் சேவையில் மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், சேவை தாமதங்கள், விமான ரத்து ஆகியவை ஏற்படக்கூடும்,” என்றது.

ஏர் இந்தியா நிறுவனமும் எக்ஸ் பதிவின் மூலம் பயணிகளுக்கு விமானச் சேவையில் தாமதம் ஏற்படக்கூடும் என்பதை அறிவுறுத்தியது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்