உலகளவில் காற்றுத்தூய்மைக்கேடு: 70% மரணங்கள் இந்தியாவில்

உலகளவில் காற்றுத்தூய்மைக்கேடு: 70% மரணங்கள் இந்தியாவில்

2 mins read
65d5b1d6-6629-408e-869c-924ffc45cbbc
காற்றுத்தூய்மைக்கேட்டால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி நகரம். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

புதுடெல்லி: உலகளவில் காற்றுத்தூய்மைக்கேட்டால் ஏற்படும் உயிரிழப்புகளில் சுமார் 70 விழுக்காடு மரணங்கள் இந்தியாவில் நிகழ்பவை என்று சுகாதாரம், பருவநிலை மாற்றம் தொடர்பான உலகளாவிய அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

இவ்வாண்டுக்கான புள்ளிவிவரங்களைக் கொண்ட அந்த அறிக்கையை யுனிவர்சிட்டி காலேஜ் லண்டன் பல்கலைக்கழகமும் உலகச் சுகாதார நிறுவனமும் இணைந்து வரைந்துள்ளன. காற்றுத்தூய்மைக்கேட்டால் இந்தியாவில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 1.72 மில்லியன் மரணங்கள் நிகழ்வதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை, 2010ஆம் ஆண்டின் பதிவுகளோடு ஒப்பிட்டால் 38 விழுக்காடு அதிகரித்துள்ளது.

உலகளவில் ஆண்டுதோறும் காற்றுத்தூய்மைக்கேட்டால் 2.5 மில்லியன் மக்கள் உயிரிழக்கின்றனர். அந்த மரணங்களில் 752,000 படிம எரிபொருள், அதிலும் குறிப்பாக கரி, திரவ எரிவாயு ஆகியவற்றின் காரணமாக ஏற்பட்டவை என்பது தெரிய வந்துள்ளது. கரியினால் மட்டுமே 394,000 மரணங்கள் ஏற்படுகின்றன. மேலும், பெட்ரோல் பயன்பாட்டால் 269,000 பேர் உயிரிழக்கின்றனர்.

இந்திய வீடுகளில் பயன்படுத்தப்படும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் எரிபொருள்களும் அறிக்கையில் ஆராயப்பட்டன. 2022ஆம் ஆண்டில் வீடுகளில பயன்படுத்தப்படும் எரிபொருள்களால் ஏற்பட்ட காற்றுத்தூய்மைக்கேடால் ஒவ்வொரு 100,000 பேரில் 113 பேர் உயிரிழந்தனர்.

இந்த எண்ணிக்கை, கிராமப் புறங்களில்125, நகர்ப்புறங்களில் 99 எனப் பதிவானது. 2022ல் காற்றுத்தூய்மைக்கேட்டால் இயல்புக்கு முன்னரே எற்பட்ட உயிரிழப்புகளால் பொருளியல் ரீதியாக இந்தியாவுக்கு 339.4 பில்லியன் டாலர் (439.8 பில்லியன் வெள்ளி) இழப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 9.5 விழுக்காடாகும்.

அதோடு, 2024ஆம் ஆண்டில் இந்தியாவில் அனல்காற்று வீசிய நாள்களின் எண்ணிக்கை 50 விழுக்காடு அதிகரித்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அப்படியென்றால் சராசரியாக மக்கள் கூடுதலாக 366 மணிநேரம் அளவுக்கதிகமான வெப்பத்தை எதிர்கொள்ள நேரிட்டது.

ஆண்டுதோறும் குறைந்தது ஒரு மாத காலத்துக்கு அளவுக்கதிகமாக வெப்பத்தை எதிர்நோக்கும் பகுதிகள், 1951-1960 ஆண்டுகளில் இருந்ததைவிட 2015-2024 ஆண்டுகளில் 138 விழுக்காடு கூடின.

குறிப்புச் சொற்கள்