2,500 விமானங்களை ரத்துசெய்த ஏர் இந்தியா

2,500 விமானங்களை ரத்துசெய்த ஏர் இந்தியா

2 mins read
ஏப்ரலில் அதிக பாதிப்பு இருக்கும் என எதிர்பார்ப்பு
c9406fe5-66da-42eb-b1a5-04d31d109488
மத்திய கிழக்கு வட்டாரத்திற்கான தனது விமானங்களில் 30 விழுக்காட்டை மட்டுமே ஏர் இந்தியா தற்போது இயக்கி வருகிறது. - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

புதுடெல்லி: மத்திய கிழக்கில் மூண்டுள்ள சண்டையை அடுத்து கடந்த மூன்று வாரங்களில் அவ்வட்டாரத்திற்கான 2,500 விமானங்களை ஏர் இந்தியா ரத்துசெய்துவிட்டது.

மத்திய கிழக்கு வட்டாரத்திற்கான விமானங்களில் 30 விழுக்காட்டை மட்டுமே தற்போது அது இயக்கி வருகிறது.

ஏர் இந்தியா ஊழியர்களுக்கு அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கேம்பல் வில்சன் எழுதியுள்ள கடிதத்தில் இவ்விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

விமான நிலையங்கள், வான்வெளிகள் மூடப்பட்டிருப்பதும் பாதுகாப்பு அம்சங்களுமே இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

அத்துடன், விமான எரிபொருள் விலை இருமடங்கைத் தாண்டிவிட்டதும் விமானப் போக்குவரத்துத் துறையில் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியிருப்பதாகத் திரு வில்சன் தெரிவித்துள்ளார்.

“அடுத்த மாதம்தான் அதிக பாதிப்பு இருக்கும்,” என்றும் அவர் சொன்னார்.

இதனையடுத்து, கூடுதல் செலவைச் சமாளிக்கும் வகையில் புதிய பயணச்சீட்டுகளுக்கு ‘எரிபொருள் கூடுதல் கட்டணத்தை’ (Fuel Surcharge) ஏர் இந்தியா ஏற்கெனவே அமல்படுத்தியுள்ளது.

“பிரிட்டன், ஐரோப்பா, வடஅமெரிக்கா ஆகிய வட்டாரங்களுக்கான விமானங்கள் மாற்றுப்பாதைகளில் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், கூடுதல் எரிபொருள் தேவைப்படுகிறது; பயண நேரமும் அதிகமாகிறது,” என்றும் திரு வில்சன் சொன்னார்.

நிலையில்லாப் பொருளியல் சூழலில் போக்குவரத்துத் தேவையும் அதிகமாக இருக்காது என்று அவர் கவலை தெரிவித்தார்.

“எல்லா வாடிக்கையாளர்களும் அதிகக் கட்டணம் செலுத்த தயாராக இருக்கமாட்டார்கள். அதனால், பயணச்சீட்டு விலை உயர்வும் ஒரு வரம்பிற்குள்தான் இருக்க வேண்டும்,” என்றார் திரு வில்சன்.

நிலைமைக்கு ஏற்ப ஏர் இந்தியா விமானப் போக்குவரத்து அட்டவணையில் அடிக்கடி மாற்றங்கள் செய்யப்படலாம் என்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
ஏர் இந்தியாமத்திய கிழக்குவிமானம்கட்டணம்