வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவி உண்டு: ஏக்நாத் ‌ஷிண்டே

1 mins read
f0cf384b-c880-4533-862c-8d602fa1df1f
மகாரா‌ஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ‌ஷிண்டே. - படம்: ஐஏஎன்எஸ்

தானே: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உதவிக்கரம் நீட்ட அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாகவும் தீபாவளிப் பண்டிகை அவர்களுக்கு சோகமானதாக இருக்க அரசாங்கம் விடாது என்றும் மகாரா‌ஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ‌ஷிண்டே உறுதியளித்துள்ளார்.

சனிக்கிழமை (அக்டோபர் 18) இரவு நடைபெற்ற தமது சிவ சேனா கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திரு ஷிண்டே, “தீபாவளி தொடங்கிவிட்டது. நாம் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறோம். ஆனால் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் மராத்வாடா பகுதியில் வெள்ளத்தால் துயரம் நிலவுகிறது, விவசாயிகள் அழுகின்றனர்,” என்று வருத்தம் தெரிவித்தார்.

மராத்வாடா வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிக்கரம் நீட்ட தமது கட்சி உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். பேரிடர் நிவாரணப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு சிவ சேனா ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தீபாவளிக் கொண்டாட்டங்கள் இயல்பாக இருக்க மகாரா‌ஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் தலைமையிலான மாநில அரசாங்கம் நிதியுதவி கூடுதல் வேகத்தில் பாதிக்கப்பட்டோரைச் சென்றடைய நடவடிக்கை எடுத்திருப்பதாகக் கூறினார்.

இதற்கிடையே, மகாரா‌ஷ்டிராவில் எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் உதவ் தாக்ரேயின் தலைமையிலான சிவ சேனா பிரிவும் அவரின் ஒன்றுவிட்ட சகோதரர் ராஜ் தாக்ரேயின் நவ்னிர்மன் சேனா கட்சியும் கூட்டணி அமைத்துக்கொள்ளக்கூடும் என்று பேசப்பட்டு வருகிறது. அதுகுறித்துப் பேசிய திரு ‌ஷிண்டே, தங்களின் கொள்கைகளைப் பின்பற்றாதோரை மக்கள் நிராகரிப்பர் என்று சாடினார்.

குறிப்புச் சொற்கள்