கேரளத் தேர்தல் களத்தில் அசத்தும் ‘ஏஐ’ காணொளிகள்

கேரளத் தேர்தல் களத்தில் அசத்தும் ‘ஏஐ’ காணொளிகள்

2 mins read
04b021db-c20f-45ef-a4f9-00ad1f07db67
கேரளாவில் ஆளும் தரப்பு வெளியிட்ட அரசுத் திட்டங்கள் தொடர்பான ‘ஏஐ’ சுவரொட்டி. - படம்: நியூஸ்டிரம் / எக்ஸ் தளம்
Google News Preferred Icon

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் வரும் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

அங்கு தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் நேரடியாக மக்களைச் சந்தித்துப் பேசுவதைவிட இணையம், நவீன தொழில்நுட்பங்கள் மூலம் பிரசாரம் செய்யும் உத்தியைக் கையாண்டு வருகின்றன..

குறிப்பாக, உலகெங்கும் பேசுபொருளாக மாறியுள்ள ‘ஏஐ’ தொழில்நுட்பம், கேரளத் தேர்தல் களத்திலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

கேரளாவில் கைப்பேசி பயன்பாடு இளையர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இவர்களில் பெரும்பாலானோர் எந்நேரமும் கைப்பேசியில் மூழ்கிக்கிடப்பதால் அரசியல் கட்சிகள் மின்னிலக்கப் பிரசார நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி உள்ளன.

கம்யூனிஸ்ட்டுகள், காங்கிரஸ், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தகவல் தொழில்நுட்பப் பிரிவுகள் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன.

மேலும், வேட்பாளர்களும் தனியார் நிறுவனங்கள் மூலம் தங்களுக்கென பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இந்த இடத்தில்தான் செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) தேவை முக்கியத்துவம் பெறுகிறது.

இம்முறை எர்ணாகுளம் சட்டமன்றத் தொகுதியில் பாஜகவைச் சேர்ந்த பி.ஆர். சிவசங்கர் போட்டியிடுகிறார். ‘ஏஐ’ மூலம் தயாரிக்கப்பட்ட இவரது பிரசாரக் காணொளிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பாஜகவின் கட்சிக்கொடி, தேசியக் கொடியை ஏந்திச்செல்லும் மக்களுக்கிடையே பிரசார வாகனத்தில் நின்று, கையசைத்தபடி ஒரு தலைவர் செல்லும் காட்சி அக்காணொளியில் இடம்பெற்றுள்ளது. அந்தத் தலைவர் பிரதமர் மோடி அல்லது அமித்ஷா அல்லர். பி.ஆர். சிவசங்கர்தான் தலைவரைப்போல் சித்திரிக்கப்பட்டுள்ளார்.

‘ஏஐ’ தொழில்நுட்பத்தின் உதவியோடு உருவாக்கப்பட்ட இந்தக் காணொளி, மக்கள் மனத்தில் நம்பிக்கையை விதைக்கும் வகையில் உள்ளது என்றும் அனைத்துத் தரப்பு மக்களையும் எளிதில் சென்றடையும் வகையில் உள்ளது என்றும் பாஜகவினர் கூறுகின்றனர்.

மக்களிடம் கட்சியின் கருத்துகளை கொண்டுசேர்க்க இத்தகைய ‘ஏஐ’ காணொளிகள் பெரும் பங்களிப்பதாகச் சொல்கிறார் அங்கமாலி சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் காங்கிரஸ் வேட்பாளருமான ரோஜி எம். ஜான்.

மேலும் கேரளாவை உலுக்கி எடுத்துள்ள சபரிமலையில் தங்கம் மாயமான விவகாரம், கடத்தல் தங்கம் விவகாரம் ஆகியவற்றில் ஆளும் தரப்பினருக்குத் தொடர்பு உள்ளது என்று விவரிக்கும் ‘ஏஐ’ காணொளிகளை காங்கிரஸ் பிரசாரத்துக்குப் பயன்படுத்தி வருகிறது.

காலஞ்சென்ற முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் உம்மன் சாண்டி போன்றவர்களை முன்னிறுத்தியும் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.

ஆனால், ஆளும் இடதுசாரி தரப்பைச் சேர்ந்தவர்களோ, “மற்றவர்களைக் குறைகூற நாங்கள் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில்லை. சுவரொட்டிகள் உருவாக்கவும் அரசின் நலத்திட்டங்களை விளக்கவும் மட்டுமே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம்,” என்றனர்.

குறிப்புச் சொற்கள்