நடிகர் கமல்ஹாசன் எம்.பி. ஆனார்; தமிழில் உறுதிமொழி ஏற்பு

நடிகர் கமல்ஹாசன் எம்.பி. ஆனார்; தமிழில் உறுதிமொழி ஏற்பு

2 mins read
7b2f2cb8-dbeb-4073-a16e-369575164914
மாநிலங்களவையில் தமிழில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட கமல்ஹாசன். - படம்: தமிழக ஊடகம்
Google News Preferred Icon

புதுடெல்லி: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) முறைப்படி நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டார். அவர், தமிழில் உறுதிமொழி ஏற்றார்.

வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நாடாளுமன்ற கீழவை, மேலவை கூடியது.

நாடாளுமன்ற மேலவையில் கமல்ஹாசன் எம்.பி.யாக தமிழில் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு நாடாளுமன்ற மேலவை சபாநாயகர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

முன்னதாக தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி, திமுகவைச் சேர்ந்த சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், அதிமுகவை சேர்ந்த சந்திரசேகரன் ஆகிய 6 எம்பிக்களின் பதவிக் காலம் வெள்ளிக்கிழமையோடு (ஜூலை 24) நிறைவடைந்தது.

அவர்களுக்கு மாநிலங்களவையில் நேற்று வழியனுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கடைசி நாளில் அன்புமணி மட்டும் அவைக்குச் செல்லவில்லை.

ஓய்வுபெறும் எம்பிக்கள் குறித்து பேசிய மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், “அனல் பறக்கும் பேச்சால் அனைவரையும் ஈர்த்த வைகோ ஓய்வு பெற்றுள்ளார். கடந்த 1978, 1984, 1990 என 3 முறை இந்த அவைக்கு தேர்வு செய்யப்பட்ட அவர் கடந்த 2019ஆம் ஆண்டில் மீண்டும் மாநிலங்களவை எம்பியானார். இந்த அவைக்கு அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி உள்ளார். வைகோ உட்பட 6 எம்பிக்களும் மாநிலங்களவைக்கு சிறந்த பங்களிப்புகளை வழங்கியுள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்,” என்று குறிப்பிட்டார்.

மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா கூறும்போது, “ஓய்வுபெறும் 6 எம்பிக்களும் ஜனநாயகத்தை வலுப்படுத்த தங்களின் சிறந்த பங்களிப்பை வழங்கினர்,” என்று புகழாரம் சூட்டினார்.

பதவி ஓய்வு பெற்ற ஆறு எம்பிக்களில் திமுகவை சேர்ந்த வில்சன் மீண்டும் மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் தமிழகத்தில் இருந்து திமுகவை சேர்ந்த கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம், அதிமுகவை சேர்ந்த இன்பதுரை, தனபால், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட கமல்ஹாசன் உள்ளிட்ட எம்பிக்கள் மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்